இறைசக்தி இருந்ததால் அய்யா வைகுண்டசாமியால் ஏற்றத்தாழ்வு நிலையை மாற்ற முடிந்தது; சாமிதோப்பில் தரிசனம் செய்த கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

இறைசக்தி இருந்ததால் அய்யா வைகுண்டசாமியால் ஏற்றத்தாழ்வு நிலையை மாற்ற முடிந்தது என சாமிதோப்பு தலைமைப்பதியில் தரிசனம் செய்த பிறகு கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
தென்தாமரைகுளம்,
இறைசக்தி இருந்ததால் அய்யா வைகுண்டசாமியால் ஏற்றத்தாழ்வு நிலையை மாற்ற முடிந்தது என சாமிதோப்பு தலைமைப்பதியில் தரிசனம் செய்த பிறகு கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
சாமிதோப்பில் கவர்னர் தரிசனம்
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காலை 7 மணிக்கு சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதிக்கு வந்தார். அங்கு அவரை பால ஜனாதிபதி வரவேற்றார்.
பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தலைப்பாகை கட்டப்பட்டு திருநாமம் இடப்பட்டது. தொடர்ந்து வடக்கு வாசலில் அய்யா வைகுண்டசாமி தவம் இருந்த பகுதி மற்றும் பள்ளியறைக்கு சென்று அய்யா வைகுண்டசாமியை கவர்னர் தரிசனம் செய்தார்.
தீண்டாமை கொடுமை
பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவி அய்யா வைகுண்டசாமி குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தர்மம் கீழே விழும்போது அதை நிலைநாட்டி அந்த சூழலை சுமூகமாக மாற்றி, மனிதன் மட்டும் வாழ வழிவகை செய்யப்படாமல் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் வாழ்வதற்கு தேவை ஏற்படும் பொழுது அய்யா வைகுண்ட சாமி தோன்றினார்.
அய்யா வைகுண்டசாமி வாழ்ந்த காலத்தில் தீண்டாமை கொடுமை இந்த பகுதியில் கோலூன்றி நின்றது. இது வெட்கப்பட்டு தலை குனிய வேண்டிய விஷயம். கடவுள் மனிதனாக பிறந்து தான் இதை சரி செய்ய முடியும்.
வைகுண்டசாமிக்கு இறைசக்தி
மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு நிலவியதை மனிதனாக பிறந்து ஒருவர் இந்த சமூக சீர்கேட்டை சரி செய்ய முடியாது. அய்யா வைகுண்டசாமிக்குள் இறை சக்தி இருந்ததால் மட்டுமே ஏற்றத்தாழ்வு நிலையை மாற்ற முடிந்தது. அவர் போதித்த சமத்துவம், சமூக நீதி, கண்ணாடி வழிபாட்டு முறையின் மூலம் அவரவர்களே கடவுள் என்ற நிலையை எட்ட வேண்டும் என்ற அவரின் போதனையின் படி வாழும், அய்யாவழி குடும்பத்தினர் பெருகி உலகம் தழுவிய குடும்பமாக மாறிட வேண்டும்.
இந்த வழிபாட்டு முறையை இன்றளவும் கடைப்பிடித்து, போதித்து வரும் இந்த குருமார்கள் குடும்பம் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் சீரும் சிறப்புமாக வாழ வேண்டும். என் வாழ்வில் இன்று மறக்க முடியாத நாள். அரும் பணியாற்றுகிற இந்த நிர்வாகத்திற்கு என்றும் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அகிலத்திரட்டு புத்தகம் வழங்கப்பட்டது
முன்னதாக பள்ளியறைக்கு வருகை தந்த கவர்னர் ஆர்.என்.ரவியை பால லோகாதிபதி, பையன் கிருஷ்ண ராஜ் ஆகியோர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். பின்னர் அவருக்கு இனிமம் வழங்கப்பட்டது.
மேலும் குரு ஜனா யுகேந்த், கவர்னருக்கு குத்து விளக்கு மற்றும் அய்யா வைகுண்டசாமி அருளிய அகிலத்திரட்டு புத்தகத்தை வழங்கினார். ஆங்கிலம் மற்றும் தமிழில் இருந்த அகிலத்திரட்டு புத்தகம் அவருக்கு வழங்கப்பட்டது.
மேலும் கவர்னர் ஆர்.என்.ரவியை சாமிதோப்பு ஊராட்சி சார்பில் ஊராட்சி தலைவர் மதிவாணன் மற்றும் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளையினர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.






