பள்ளி மாணவர்களை தாக்கிய வழக்கு: 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன் போலீஸ் நிலையத்தில் தினசரி கையெழுத்திட உத்தரவு
நாமக்கல் மாவட்டம் பெரியமணலி பழக்காரன்காடு பகுதியை சேர்ந்தவர் லோகேஸ்வரன். இவருடைய மகன் தனுஷ் (வயது 18). பிளஸ்-2 படித்து வருகிறார். கோக்கலை பகுதியை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ். இவருடைய மகன் குமரேஷ் (19). பிளஸ்-1 படித்து வருகிறார். இவர்களை பெரியமணலியை சேர்ந்த தங்கமணி (56), பூபாலன் (36), சேகர் (39) ஆகியோர் சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கியதாக எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் போலீசார் தேடி வந்த 3 பேரும் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்று விட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று தங்கமணி உள்பட 3 பேரும் நாமக்கல் எஸ்.சி., எஸ்.டி. கோர்ட்டில் ஆஜராகினர். நீதிபதி நந்தினி அவர்கள் 3 பேரையும் நிபந்தனை ஜாமீனில் விடுவித்தார். அதில் திருச்செங்கோடு டவுன் போலீசில் தினசரி காலை, மாலை வேளையில் கையெழுத்து போட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.