ரேஷன் கார்டுதாரர்களுக்கு வங்கி கணக்கு எண், ஆதார் எண் இணைப்பு கட்டாயம் இல்லை - முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி


ரேஷன் கார்டுதாரர்களுக்கு வங்கி கணக்கு எண், ஆதார் எண் இணைப்பு கட்டாயம் இல்லை - முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
x

ரேஷன்கார்டுதாரர்களுக்கு வங்கி கணக்கு எண், ஆதார் எண் இணைப்பு கட்டாயம் இல்லை என்று முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.

காஞ்சிபுரம்

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் நிகழ்ச்சி காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்தில் நடைபெற்றது. இநத நிகழ்ச்சியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மொத்தம் 62 பேருக்கு ரூ.22 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.

அப்போது அவருடன் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி, காஞ்சீபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை தொடர்ந்து அவர் காஞ்சீபுரம் எம்.வி.எம்.பி. நகர் பகுதி நேர ரேஷன் கடை, ஏகாம்பரநாதர் சன்னதி தெரு ரேஷன் கடை, காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம், தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக கிடங்கு, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக பயணியர் மாளிகை போன்றவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 48-வது வார்டு கணேஷ் நகர் பகுதியில் ரூ.15 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட ரேஷன் கடை, கண்காணிப்பு கேமரா, மாற்றுத்திறனாளிகள் செல்லும் மேடை, பயனாளிகள் அமர இருக்கை, பயனாளிகள் தெரிந்து கொள்ள புராதான சின்ன ஓவியம், திருவள்ளுவர் ஓவியம், குடிநீர் போன்ற அதிநவீன கட்டிடமாக கட்டப்பட்டுள்ளதால் முன்மாதிரியான ரேஷன் கடையாக கூட்டுறவுத்துறை அறிவித்தது.

பின்னர் அவர் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

தமிழகத்தில் 2 கோடியே 23 லட்சம் ரேஷன்கார்டுதாரர்கள் உள்ளனர். அவர்களில் 14 லட்சத்து 86 ஆயிரம் ரேஷன்கார்டுதாரர்கள் மட்டுமே ரேஷன் கார்டில் வங்கி எண், ஆதார் எண் இணைக்காமல் உள்ளனர். 95 சதவீதம் ரேஷன் கார்டுதாரர்கள் இணைக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ளவர்களை இணைக்கும் பணி நடைபெறுகிறது. ரேஷன்கார்டு தாரர்களுக்கு வங்கி கணக்கு எண், ஆதார் எண் இணைப்பு கட்டாயம் இல்லை.

ரேஷன்கார்டில் வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் எண் இணைத்தால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என்ற எண்ணம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குனர் முருகன், மாவட்ட கூட்டுறவு பண்டக சாலை நிர்வாக இயக்குனர் முருகானந்தம், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய நிர்வாக இயக்குனர் சத்தியநாராயணன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாளர் முரளி, பெரிய காஞ்சீபுரம் கூட்டுறவு நகர வங்கி பொது மேலாளர் ஸ்ரீராம் உள்பட கூட்டுறவு துறையினர் கலந்து கொண்டனர்.


Next Story