பத்து ரூபாய் நாணயங்கள் பிரச்சனை தீர வங்கிகள் தங்குதடையின்றி வாங்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம்


பத்து ரூபாய் நாணயங்கள் பிரச்சனை தீர வங்கிகள் தங்குதடையின்றி வாங்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம்
x

பத்து ரூபாய் நாணயங்கள் பிரச்சனை தீர வங்கிகள் தங்குதடையின்றி வாங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு, ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டுள்ள 10 ரூபாய் நாணயங்கள் சென்னையை தவிர்த்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், கிராமப்புறங்களிலும் வணிக நிறுவனங்கள், போக்குவரத்து சேவை, மருந்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாங்க மறுப்பதால் அது செல்லாது என்கிற நிலையே தற்போது வரை நீடித்து வருகிறது. அதனால் பல தருணங்களில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 14 வகையான 10 ரூபாய் நாணயங்களுமே செல்லும் எனவும், அவற்றை செல்லாது என கூறுவதோ, அதனை பணப்பரிமாற்றத்தின் போது கொடுக்கவோ, வாங்கவோ மறுப்பது இந்திய தண்டனைச் சட்டம் 124A வின் படி குற்றமாகும், இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்களை வாங்க மறுத்தால் அந்த குற்றத்திற்கு மூன்று வருட சிறை தண்டனையும் அபராதமும் வழங்கப்படும் என தற்போது ரிசர்வ் வங்கி விடுத்துள்ள எச்சரிக்கையை மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி வரவேற்கிறது.

அதே சமயம் இந்த எச்சரிக்கையானது வெறும் ஊடக அறிவிப்பாக இல்லாமல் இருக்க வேண்டுமானால் முதலில் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களின் பணப்பரிவர்ததனையின் போது அனைத்து வகையான 10 ரூபாய் நாணயங்களையும் தங்குதடையின்றி வாங்கி கொள்ள வேண்டும் எனவும், அவ்வாறு வாடிக்கையாளர்களின் பணப்பரிவர்ததனையின் போது வாங்க மறுக்கும் வங்கிகள், வங்கி ஊழியர்கள் மீது மேற்குறிப்பிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட வேண்டும்.

ஏனெனில் அனைத்து வகையான சிறு, குறு, நடுத்தர, மிகப்பெரிய வணிக தொழில் நிறுவனங்களாகட்டும் அல்லது பேருந்து, ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளாகட்டும், மருத்துவம், குடிநீர், பால், காய்கறி, பழங்கள், இறைச்சிகள் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளாகட்டும் அவர்களிடம் பொதுமக்கள் 10 ரூபாய் நாணயத்தை கொடுத்து பரிவர்த்தனை செய்யும் போது அது ஒரு சங்கிலித் தொடர் போல சென்று ஒவ்வொரு இடத்திலும் குறிப்பிட்ட அளவு நாணயங்கள் தேங்கி விடும்.

அவ்வாறு தேங்கும் நாணயங்களை சம்பந்தப்பட்டவர்கள் தாங்கள் வங்கியில் பணப்பரிவர்ததனை செய்ய செல்லும் போது கொண்டு செல்கின்றனர். ஆனால் அந்த வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் 10 ரூபாய் நாணயங்களை வங்கி காசாளர் எண்ணி வாங்கி மறு சுழற்சி அடிப்படையில் பரிவர்த்தனை செய்ய தயங்குவதாலேயே அதனை சம்பந்தப்பட்ட வங்கிகள் வாங்க மறுத்து வாடிக்கையாளர்களை திருப்பி அனுப்பி விடுகின்றன.

அதுமட்டுமின்றி ஒருவேளை அப்படியே ஒரு சில வங்கிகளில் வாங்கினாலும் கூட 10 ரூபாய் நாணயங்களை பணப்பரிவர்ததனையின் போது பரிமாற்றம் செய்ய ஆயிரம் ரூபாய்க்கு 50 ரூபாய் வரை வங்கி ஊழியர்கள் கமிஷன் கேட்பதாக ஒரு குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருவதாலும், வங்கிகள் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாலும் மேலிருந்து ஒவ்வொரு துறையாக அந்த 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் சூழ்நிலை உருவாகி தற்போது அது செல்லாது என்கிற தவறான புரிதல் மக்கள் மத்தியில் நிலவத் தொடங்கி விட்டது.

எனவே இந்திய அரசு அங்கீகரித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அனைத்து வகையான 10 ரூபாய் நாணயங்களையும் முதலில் அனைத்து வங்கிகளும் தங்குதடையின்றி வாங்கி பணப்பரிவர்ததனை செய்தாலே தமிழகம் முழுவதும் நிலவும் இப்பிரச்சினைக்கு சுமூக தீர்வு கிடைத்து விடும் என்பதால் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் அனைத்து தனியார் வங்கிகளும் 10 ரூபாய் நாணயங்களை வாடிக்கையாளர்களின் பணப்பரிவர்த்தனையின் போது தங்குதடையின்றி வாங்க வேண்டும் என வங்கிகளுக்கு கண்டிப்புடன் கூடிய உத்தரவை ரிசர்வ் வங்கி பிறப்பிப்பதே இப்பிரச்சினைக்கு சுமூகமான, நிரந்தர தீர்வு கிடைக்க வழிகோலும் என்பதால் அவ்வாறு 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் வங்கிகள் மற்றும் ஊழியர்கள் மீது மேற்சொன்ன பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கிகளுக்கு உத்தரவிடுமாறு மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் நல அணி சார்பில் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story