பரிசு கூப்பன்கள், பணச்சலுகை, சினிமா டிக்கெட் வழங்க வங்கிகள் விருப்பம்: சொத்து வரியை `ஆன்லைன்' மூலமாக செலுத்துபவர்களுக்கு சலுகை


பரிசு கூப்பன்கள், பணச்சலுகை, சினிமா டிக்கெட் வழங்க வங்கிகள் விருப்பம்: சொத்து வரியை `ஆன்லைன் மூலமாக செலுத்துபவர்களுக்கு சலுகை
x

சொத்து வரியினை `ஆன்லைன்' முறையில் செலுத்துபவர்களுக்கு நிபந்தனைகளுடன் பரிசு கூப்பன்கள், பணச்சலுகை, சினிமா டிக்கெட் வழங்க வங்கிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள சொத்துவரி மதிப்பீடுகளுக்கு சொத்துவரி சீராய்வு மேற்கொள்ளப்பட்டு, பொதுசீராய்வு அறிவிப்புகள் தபால் துறை மூலமாக சொத்து உரிமையாளர்களின் முகவரிக்கு அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 27-ந்தேதி வரை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்களுக்கு பொது சீராய்வு அறிவிப்புகள் சார்வு செய்யப்பட்டுள்ளது.

சொத்துவரி பொது சீராய்வு அறிவிப்புகளில் முந்தைய சொத்துவரி மற்றும் பொது சீராய்வின்படி நிர்ணயம் செய்யப்பட்டுள்ள சொத்துவரி ஆகிய விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, பொது சீராய்வின்படி சொத்துக்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள சொத்துவரியினை சொத்து உரிமையாளர்கள் எளிதாக செலுத்தும் வகையில் சீராய்வு அறிவிப்புகளில் 'டினி.யூஆர்எல்' மற்றும் 'க்யூ.ஆர். கோடு' ஆகிய வழிமுறைகள் மற்றும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் சொத்துவரியினை எளிதாக செலுத்தும் வசதிகள் வருமாறு:-

* சென்னை மாநகராட்சி வருவாய் அலுவலரின் பெயரில் காசோலைகள் மற்றும் வரைவோலைகள், கடன், பற்று அட்டை மூலமாக பெருநகர சென்னை மாநகராட்சியின் வரி வசூலிப்பவர்களிடம் செலுத்தி, செலுத்தப்பட்டதற்கான வரிசீட்டினை பெற்றுக்கொள்ளலாம்.

* பெருநகர சென்னை மாநகராட்சியின் வலைத்தளம் (www.chennaicorporation.gov.in) மூலமாக எவ்வித பரிமாற்ற கட்டணமில்லாமல் சொத்துவரி செலுத்தலாம்.

* தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் மூலம் நேரடியாக பணமாகவும் சொத்துவரி செலுத்தலாம்.

* 'நம்ம சென்னை' மற்றும் 'பே.டி.எம்.' முதலிய செயலி மூலமாகவும் சொத்துவரி செலுத்தலாம்.

* 'பி.பி.பி.எஸ்.' (பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம்) மூலமாகவும் சொத்துவரி செலுத்தலாம். மண்டல, வார்டு அலுவலகங்களின் அமைந்துள்ள இ-சேவை மையங்களிலும் சொத்துவரி செலுத்தலாம்.

பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட சொத்து உரிமையாளர்கள் தற்போது சொத்துவரியினை `ஆன்லைன்' மூலமாக செலுத்தும் பட்சத்தில், குறிப்பிட்ட வங்கிகள் நிபந்தனைகளுக்குட்பட்டு பரிசு கூப்பன்கள், குறிப்பிட்ட சதவீதம் பணச்சலுகை மற்றும் திரைப்பட நுழைவுச் சீட்டு (சினிமா டிக்கெட்) போன்ற சலுகைகள் வழங்க விருப்பம் தெரிவித்துள்ளது.

எனவே, சொத்துவரி பொது சீராய்வின்படி நிர்ணயிக்கப்பட்டுள்ள சொத்து வரியினை சொத்து உரிமையாளர்கள், அதற்காக ஏற்படுத்தப்பட்ட வழிமுறைகளில் செலுத்தி, பெருநகர சென்னை மாநகராட்சியின் சேவைப்பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்கவேண்டும்.


Next Story