விசைப்படகு மீனவர்கள் வலையில் அதிக அளவில் சிக்கிய மீன்கள்; கேரள வியாபாரிகளும் குவிந்ததால் விலை உயர்ந்தது


தினத்தந்தி 18 Jun 2023 12:15 AM IST (Updated: 18 Jun 2023 10:35 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் வலையில் மீன்கள் அதிகளவில் சிக்கின. மீன்களை வாங்க கேரள வியாபாரிகளும் குவிந்ததால் அவற்றின் விலை உயர்ந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் வலையில் மீன்கள் அதிகளவில் சிக்கின. மீன்களை வாங்க கேரள வியாபாரிகளும் குவிந்ததால் அவற்றின் விலை உயர்ந்தது.

மீன்பிடி தடைக்காலம்

மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்திலும் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தது.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம், வேம்பார், தருவைகுளம் ஆகிய இடங்களில் உள்ள சுமார் 545 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. மீனவர்கள் தங்களது படகுகளை சீரமைத்தல், வலைகளை சரிசெய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.

இந்த மீன்பிடி தடைக்காலம் கடந்த 14-ந்தேதி முடிந்ததால், மறுநாள் மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாரானார்கள். ஆனால் மன்னார்வளைகுடா பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், எனவே, மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் தடைக்காலம் முடிந்ததும் முதல்நாளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

வலையில் சிக்கிய மீன்கள்

62 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் அதிகாலையில் தூத்துக்குடியில் இருந்து 250-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அதேபோல் தருவைகுளம், வேம்பார் போன்ற பகுதிகளில் இருந்தும் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் ஆழ்கடலில் மீன் பிடித்துவிட்டு இரவு 7.30 மணி முதல் கரைக்கு திரும்பி வரத்தொடங்கினர். சுமார் 2 மாதங்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்களின் வலையில் பாறை, ஊளி, விளமீன், நெத்திலி, நகரை, செந்நகரை, கணவாய், சீலா, மஞ்சள்பாறை, சில்வர்பாறை, கிளாத்தி, கோழி தீவனத்துக்கு பயன்படும் கலசல் மீன்கள் மற்றும் நண்டுகள் அதிகளவு கிடைத்தன. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வியாபாரிகள் குவிந்தனர்

அந்த மீன்கள் அனைத்தும் ஏலக்கூடத்துக்கு கொண்டு வரப்பட்டு தரம் பிரித்து கூடைகளில் வைத்து ஏலம் விடப்பட்டது. அரபிக்கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் கேரளா மீனவர்கள் தற்போது மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. அதேபோல் குமரி மாவட்ட மீனவர்களும் பலத்த காற்று எச்சரிக்கை காரணமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. எனவே, அங்குள்ள வியாபாரிகள் மீன்கள் வாங்க தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்துக்கு வந்து குவிந்தனர். அவர்கள் நல்ல விலை கொடுத்து மீன்களை வாங்கினர்.

மேலும் தூத்துக்குடி மக்களும் இரவே மீன்களை வாங்கினால் நன்றாக இருக்கும் என்பதால் மீன்பிடி துறைமுகத்துக்கு நேரடியாக வந்து குழுக்களாக சேர்ந்து தங்களுக்கு பிடித்த மீன்களை ஏலம் எடுத்தனர். இதனால் நேற்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதால் மீன்பிடி துறைமுக ஏல கூடம் களைகட்டியது.

மீன்கள் விலை உயர்ந்தது

போட்டிப்போட்டு வாங்கியதால் மீன்கள் விலையும் உயர்ந்து காணப்பட்டது. நேற்று சீலா மீன் கிலோ ரூ.1,200 முதல் ரூ.1,300 வரையிலும், விளமீன் ரூ.600-க்கும், ஊளி மீன் ரூ.650-க்கும், பாறை மீன் ரூ.700-க்கும், நண்டு ரூ.350-க்கும், சாளை மீன் ஒரு கூடை ரூ.2,500 முதல் ரூ.3,000 வரையிலும், வங்கள பாறை ஒரு கூடை ரூ.2,500-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் வலையில் அதிக மீன்கள் சிக்கியதாலும், மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததாலும் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story