விசைப்படகு மீனவர்கள் போராட்டம்
விசைப்படகு மீனவர்கள் போராட்டம்
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் மீன்பிடித் தொழிலை நம்பி மட்டும் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. அதுபோல் மீனவர்கள் விசைப்படகுகளுக்கு தேவையான மானிய டீசலை துறைமுகம் கடற்கரை அருகே செயல்பட்டு வரும் மீன் துறை டீசல் பல்க் மற்றும் மீன்துறை வளர்ச்சி கழகத்தின் கீழ் செயல்படும் டீசல் பல்க்கிலும் தங்களுக்கு தேவையான டீசலை பிடித்து செல்கின்றனர். இந்த நிலையில் ராமேசுவரத்தில் மீன் வளர்ச்சி கழகத்திற்கு செயல்படும் டீசல் பல்க்கில் ஒரு லிட்டர் டீசல் 80 ரூபாய் 50 காசுக்கும், மீன் துறையின் கீழ் செயல்படும் டீசல் பல்க்கில் ஒரு லிட்டர் டீசல் 78 ரூபாய் 50 காசு எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மீன் வளர்ச்சி கழகத்தின் கீழ் செயல்படும் டீசல் பல்க்கில் 2 ரூபாய் அதிகமாக உள்ளதால் தங்களுக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டு வருவதாகவும், 2 ரூபாயை குறைத்து விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி நேற்று மீன் வளர்ச்சிக் கழக டீசல் பல்க்கின் முன்பு அமர்ந்து விசைப்படகு மீனவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மீன் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைதொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். டீசல் பல்க் முன்பு மீனவர்கள் போராட்டம் நடத்தியதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.