மொச்சைக்காய் விளைச்சல் அமோகம்


மொச்சைக்காய் விளைச்சல் அமோகம்
x
தினத்தந்தி 30 Sep 2023 12:00 AM GMT (Updated: 30 Sep 2023 12:00 AM GMT)

ஆண்டிப்பட்டி பகுதியில் மொச்சைக்காய் அமோக விளைச்சல் அடைந்துள்ளது.

தேனி

ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை ஆற்றின் கரையோர பகுதிகளான தர்மத்துப்பட்டி, மூணாண்டிப்பட்டி, அணைக்கரைப்பட்டி, புள்ளிமான்கோம்பை உள்ளிட்ட கிராமங்களில் காய்கறி பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பாண்டில் பருவமழை போதிய அளவு பெய்யாத நிலையில் குறைந்த தண்ணீர் தேவையுள்ள பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்தனர். அதன்படி, ஏராளமான விவசாயிகள் மொச்சைக்காய் பயிரை சாகுபடி செய்தனர்.

வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு மொச்சைக்காய் செடியில் நோய் தாக்குதல் குறைந்து, அமோக விளைச்சல் கண்டுள்ளது. தற்போது மொச்சைக்காய் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் ஆண்டிப்பட்டி மார்க்கெட்டில் மொச்சைக்காய்க்கு கிராக்கி ஏற்பட்டது. இதனால் அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. வரத்து குறைவே இதற்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். விளைச்சல் அதிகரிப்பு மற்றும் போதிய விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதன் காரணமாக மொச்சைக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மார்க்கெட்டில் தற்போது மொத்த விலையில் ஒரு கிலோ மொச்சைக்காய் ரூ.60 வரை விற்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்துள்ள விவசாயிகளுக்கு இந்த ஆண்டு மொச்சைக்காய் விவசாயத்தால் நல்ல லாபம் கிடைத்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக ஒரு கிலோ மொச்சைக்காய் ரூ.30-க்கு மட்டுமே விற்பனை ஆனது. ஆனால் இந்த ஆண்டு இரட்டிப்பு லாபம் கிடைத்துள்ளது என்றனர்.


Next Story