விமான நிறுவன ஊழியர் கொலையில் கைதான அழகி சிறையில் அடைப்பு


விமான நிறுவன ஊழியர் கொலையில் கைதான அழகி சிறையில் அடைப்பு
x

கொலையான விமான நிறுவன ஊழியர் உடல் பாகங்கள் கோவளத்தில் மீட்கப்பட்டதையடுத்து, காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட அழகியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை

விமான நிறுவன ஊழியர் கொலை

சென்னை விமான நிலையத்தில் உள்ள வெளிநாட்டு விமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் ஜெயந்தன் (வயது 29). விழுப்புரத்தை சேர்ந்த இவர், சென்னையை அடுத்த நங்கநல்லூர் என்.ஜி.ஓ. காலனி 3-வது தெருவில் உள்ள தனது சகோதரி வீட்டில் கடந்த 5 ஆண்டு்களாக தங்கி, வேலைக்கு சென்று வந்தார்.

கடந்த மாதம் 18-ந் தேதி வேலைக்கு சென்ற ஜெயந்தன் அதன்பிறகு மாயமானார். இது குறித்த புகாரின்பேரில் பழவந்தாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், ஜெயந்தன் கடைசியாக புதுக்கோட்டை மாவட்டம் செம்மாளம்பட்டி ஆலவாயல் பொன் அமராவதியை சேர்ந்த விபசார அழகி பாக்கியலட்சுமி (38) என்பவரிடம் பேசியது தெரிந்தது.

போலீசார் புதுக்கோட்டை சென்று பாக்கியலட்சுமியிடம் விசாரித்தபோது, அவர் ஜெயந்தனை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி, கோவளம் அருகே வீசியதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். போலீசார் அவரை சென்னை அழைத்து வந்து மேலும் விசாரணை நடத்தினர்.

கோவளத்தில் வீச்சு

விபசார அழகியான பாக்கியலட்சுமி, தாம்பரத்தில் பாலியல் தொழில் செய்தபோது ஜெயந்தனுடன் பழக்கம் ஏற்பட்டது. 2020-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கருத்து வேறுபாடு காரணமாக 2021-ம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர். பாக்கியலட்சுமி தனது சொந்த ஊரான புதுக்கோட்டை சென்று விட்டார்.

கடந்த மாதம் 18-ந் தேதி புதுக்கோட்டை சென்ற ஜெயந்தன், அங்கு பாக்கியலட்சுமியை சந்தித்தார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் பாக்கியலட்சுமி தனது நண்பர் சங்கருடன் சேர்ந்து ஜெயந்தனை கொலை செய்தார். பின்னர் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி தீவைத்து எரித்தார். எரியாத உடல் பாகங்களை கட்டைப்பை மற்றும் சூட்கேசில் கொண்டு வந்து கோவளம் அருகே வீசிவிட்டு மீண்டும் புதுக்கோட்டைக்கு சென்றதும், இதற்கு கோவளம் பகுதியை சேர்ந்த பூசாரி வேல்முருகன் என்பவரும் உடந்தையாக இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

உடல் பாகங்கள் மீட்பு

விசாரணைக்கு பிறகு பாக்கியலட்சுமியை போலீசார் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். கொலை நடந்த இடம் புதுக்கோட்டை என்பதால் யார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்? என்பதில் போலீசார் இடையே இழுபறி ஏற்பட்டு வந்தது. உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவின்பேரில் தற்போது பழவந்தாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பரங்கிமலை போலீஸ் உதவி கமிஷனர் அமீர் அகமது தலைமையில் போலீசார் கோவளத்தில் சோதனை செய்து, அங்குள்ள பூமிநாதர் கோவில் அருகில் உள்ள குளத்தில் கல்லை கட்டி பிளாஸ்டிக் பையில் மூட்டை கட்டி வீசப்பட்ட விமான நிறுவன ஊழியர் ஜெயந்தன் தலை மற்றும் உடல் பாகங்களை சுமார் 20 நாட்களுக்கு பிறகு எலும்பு கூடாக மீட்டனர்.

சிறையில் அடைப்பு

இதையடுத்து ஜெயந்தனை கொலை செய்ததாக அழகி பாக்கியலட்சுமியை கைது செய்த போலீசார், அவரை ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 24-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து பாக்கியலட்சுமி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

கைதான பாக்கியலட்சுமி வாக்குமூலத்தின் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவளத்தைச் சேர்ந்த பூசாரி வேல்முருகனை அழைத்து பழவந்தாங்கல் போலீசார் விசாரித்தனர்.

அப்போது அவர், "சென்னைக்கு பாக்கியலட்சுமி வரும்போது அவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவரது அழகில் மயங்கி இந்த கொலைக்கு உதவினேன். என்னிடம் கொடுத்த ஜெயந்தனின் உடல் பாகத்தை கோவில் குளத்தில் வீச யோசனை கூறினேன். உடலை மீட்க உதவி செய்வதாக" போலீசாரிடம் கூறினார். இதனால் அவரை போலீசார் அனுப்பிவைத்ததாக தெரிகிறது. ஆனால் அதன்பிறகு பூசாரி வேல்முருகன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சங்கரை பிடிக்க தனிப்படை போலீசார் புதுக்கோட்டை விரைந்து உள்ளனர்.


Next Story