பிரதமர் மோடியின் தமிழக பற்று காரணமாகவே 3 பேருக்கு கவர்னர் பதவி -சி.பி.ராதாகிருஷ்ணன்
ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரின் தமிழக பற்று காரணமாகவே, தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு கவர்னர் பதவி கிடைத்துள்ளது என்று கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
கோவை,
தமிழக பா.ஜனதா மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் நேற்று சென்னை வருவதற்காக கோவை விமான நிலையத்துக்கு காரில் வந்தார்.
அங்கு அவருக்கு பா.ஜனதா நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கவர்னர் பதவி எனக்கு கிடைத்ததை மகத்தான மரியாதையாகவும், தமிழினத்துக்கு கிடைத்த பெருமையாகவும் பார்க்கிறேன். நாம் நினைக்கும் திசையில் நமது அரசியல் பயணம் செல்வது இல்லை. யாருக்கு எந்த பொறுப்பு, எப்போது கிடைக்கும் என்பதை நாம் அறிய முடியாது.
தமிழகத்தின் மீது பற்று
எனவே கவர்னர் பொறுப்போ அல்லது எந்த பொறுப்பாக இருந்தாலும் கிடைத்த வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். எனது அரசியல் பயணம் அந்த வகையில்தான் இருந்திருக்கிறது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் தமிழ் மீதும், தமிழ் கலாசாரம், இலக்கியம், பண்பாட்டின் மீது மிகுந்த பற்றும், பெருமையும் வைத்துள்ளனர். தமிழகத்தின் மீது அவர்கள் வைத்துள்ள பற்றின் காரணமாகவே, தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு (இல.கணேசன், தமிழிசை சவுந்தரராஜன், சி.பி.ராதாகிருஷ்ணன்) கவர்னர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அரசியல் குற்றச்சாட்டுகள்
பொதுவாக அரசியலில் குற்றச்சாட்டுகள் என்பது இருந்து கொண்டுதான் இருக்கும். அது நியாயமானதும் கூட. அந்த குற்றச்சாட்டுகளை நாம் மனவலிமையோடு எதிர்கொள்ள வேண்டும். அப்போது அந்த குற்றச்சாட்டுகள் காணாமல் போய்விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் வரவேற்பு
சென்னை வந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, விமான நிலையத்தில் கரு.நாகராஜன், மாவட்ட தலைவர்கள் வேதா சுப்பிரமணியன், சாய் சத்யன் உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள் சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.
பின்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசியல்
இன்னும் ஓரிரு நாளில் பதவி ஏற்பு முடிவாகும். ஜார்கண்ட் மாநிலத்தில் அதிகமாக பழங்குடி, தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் மேன்மைக்கு உழைப்பதுதான் தமிழகத்துக்கு பெருமையாக இருக்கும். ஜார்கண்ட் மாநிலத்துக்கும், தமிழகத்துக்கும் இடையே புதிய உறவை ஏற்படுத்தும் பாலமாக இருப்பேன். இதன் மூலம் 2 மாநில வளர்ச்சிக்கான சூழலை உருவாக்க திட்டங்கள் செய்யப்படும்.
கவர்னர் அரசியல் குறித்து அதிகம் பேசாமல் இருப்பது நல்லது என நினைக்கிறேன். அரசியலில் இருந்து பரிமாண வளர்ச்சியாக கவர்னர் பதவிக்கு வந்து விட்டால் அரசியலில் நாட்டம் கொள்ளாமல் முன்னேற்றத்தில் கவனம் கொள்வது சிறந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.