பவானி நகராட்சி முன்பு பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
பவானி நகராட்சி முன்பு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
நகராட்சி கூட்டம்
பவானி நகராட்சியில் சாதாரண கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் சிந்தூரி இளங்கோவன் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மணி, நகராட்சி ஆணையாளர் தாமரை, தலைமை பொறியாளர் கதிர்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
தி.மு.க. சார்பில் 19 பேரும், அ.தி.மு.க. சார்பில் 2 பேரும், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ஒருவர் என மொத்தம் 22 கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
மொத்தம் 19 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தின் முடிவில் தேசிய கீதத்துடன் நிறைவடைவது வழக்கம்.
ஆர்ப்பாட்டம்
அப்போது பாரதீய ஜனதா கொடிகளை கைகளில் ஏந்தியபடி பா.ஜ.க. பவானி நகர தலைவர் நந்தகுமார், மாவட்ட பொதுச்செயலாளர் சரவணன், செயற்குழு உறுப்பினர் கண்ணன் உள்பட 25-க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நகராட்சி அலுவலக நுழைவு வாயில் முன் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மேலும் கூட்ட அரங்குக்குள் செல்ல முற்பட்டனர்.
மனுவாக தாருங்கள்...
இதையடுத்து நகராட்சி தலைவர் சிந்தூரி இளங்கோவன் மற்றும் ஆணையாளர் தாமரை ஆகியோர் அங்கு வந்து கூட்டத்தில் தேசிய கீதம் பாடிக்கொண்டு இருக்கும் போது கோஷம் எழுப்புகிறீர்களே என்று கேட்டார்கள்.
அதற்கு, பா.ஜ.க.வினர் சொத்து வரி உயர்வு, நகரில் நாய்கள் தொல்லை, நகராட்சி அருகே உள்ள அங்கன்வாடி பள்ளி சீரமைக்கப்பட வேண்டும் என்றார்கள். அதற்கு தலைவரும், ஆணையாளரும் உங்களது கோரிக்கைகளை மனுவாக தாருங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்கள்.
இதற்கிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பவானி போலீசார் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி கலைந்து போக செய்தார்கள்..