மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேசிறப்பு மலை ரெயில் இயக்கம்
விநாயகர் சதுர்த்தியையொட்டி மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம்
விநாயகர் சதுர்த்தியையொட்டி மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட்டது.
மலை ரெயில்
"மலைகளின் அரசி" என்று வர்ணிக்கப்படும் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து அழகிய மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலைரெயிலில் செல்லும்போது, இயற்கை எழில் காட்சிகள், நீர்வீழ்ச்சிகள், மலைகளில் மோதி செல்லும் மேககூட்டங்கள் ஆகியவற்றை கண்டு ரசிக்கலாம்.
இதனால் மலை ரெயிலில் பயணம் செய்ய உள்நாட்டு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். வழக்கமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினந்தோறும் 7.10 மணிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு மதியம் 2 மணிக்கு மலைரெயில் இயக்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
இந்த நிலையில் பண்டிகை காலத்தையொட்டி மேட்டுப்பாளையம்-ஊட்டி மற்றும் ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கப்படும் என்று செலம் ரெயில்வே அறிவித்தது. அதன்படி விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே பண்டிகை கால சிறப்பு மலைரெயில் இயக்கப்பட்டது. இதில் சுமார் 180 பயணிகள் பயணம் செய்தனர். இந்த ரெயில் மதியம் 2.25 மணிக்கு ஊட்டிக்கு சென்றடைந்தது.
மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலைரெயில் இயக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த சிறப்பு ரெயிலில் முதல் வகுப்பில் 40 இருக்கைகளும், 2-வது வகுப்பு பெட்டியில் 140 இருக்கைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு முதல் வகுப்பு பெட்டியில் பயணம் கட்டணமாக ரூ.1470-ம் 2-வது வகுப்பு பெட்டிக்கு கட்டணமாக ரூ.965-ம், மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே முதல் வகுப்புக்கு ரூ.1105-ம், 2-வது வகுப்புக்கு ரூ.715-ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கட்டணத்தை குறைக்க வேண்டும்
அதேபோல் வருகிற 18-ந் தேதி ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு சிறப்பு மலைரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தை வந்தடையும்.
மேலும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 30-ந் தேதி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கும், அடுத்த மாதம் 2-ந் தேதி ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும் சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது.
சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது குறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-
மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் சிறப்பு மலைரெயிலில் அதிக கட்டணம் நிர்யணம் செய்யப்பட்டுள்ளது. இதனால் நடுத்தர மக்கள் மலை ரெயிலில் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே இந்த கட்டணத்தை குறைக்க ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குறைந்த கட்டணத்தில் உள்ளூர் (கோவை, நீலகிரி) மக்கள் பயணம் செய்ய வசதியாக கூடுதல் பெட்டியை இணைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.