ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பீகார் மாநில தொழிலாளி பலி


ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பீகார் மாநில தொழிலாளி பலி
x

மதுரைக்கு வேலையில் சேர சென்ற போது தஞ்சை அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்து பீகார் மாநில தொழிலாளி பலியானார்.

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை,

மதுரைக்கு வேலையில் சேர சென்ற போது தஞ்சை அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்து பீகார் மாநில தொழிலாளி பலியானார்.

பீகார் மாநில தொழிலாளி

பீகார் மாநிலம் ஹார்பூர் டோலா மாவட்டம் பராவா செம்ரகாட் பகுதியை சேர்ந்தவர் பின்ஹாச்சல் டோம்(வயது 48). தொழிலாளியான இவர் மதுரையில் உள்ள ஒரு கம்பெனியில் தங்கி வேலை பார்ப்பதற்காக தனது மனைவி மற்றும் மகன்களுடன் சென்னையில் இருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் ஏறி பயணம் செய்தார். ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டின் அருகே நின்று பயணம் செய்தார். நேற்று முன்தினம் இரவு இந்த ரெயில் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள வழூத்தூர் பகுதியில் வந்த போது திடீரென பின்ஹாச்சல் டோம், ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தஞ்சை ரெயில் நிலையத்தில் ரெயில் நின்ற பிறகு ஒருவர் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்த தகவலை சக பயணிகள் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டனர்.

பிணமாக கிடந்தார்

அப்போது தான் பீகார் மாநிலத்தில் இருந்து வந்த தொழிலாளி குடும்பத்தினருக்கு ரெயிலில் இருந்து கீழே விழுந்தது பின்ஹாச்சல் டோம் என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளியின் குடும்பத்தினர் மற்றும் சக பயணிகள் உடனடியாக தஞ்சை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து தஞ்சை மற்றும் கும்பகோணம் ரெயில்வே போலீசார் பாபநாசம் பகுதியில் சென்று தேடி பார்த்தனர். ஆனால் இரவு நேரம் என்பதால் அவரை பற்றி எந்தவித தகவலும் தெரியவில்லை.

போலீசார் விசாரணை

இந்தநிலையில் நேற்று காலை வழுத்தூர் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தின் அருகே பின்ஹாச்சல் டோம் பிணமாக கிடந்தார். இதை அறிந்த தஞ்சை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி உத்தரவின்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், ஏட்டு சரவணசெல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அதில் ரெயிலில் இருந்து கீழே விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story