வால்பாறையில் பிறந்த நாளில் நடந்த சோகம்: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வேட்டை தடுப்பு காவலர் பலி
வால்பாறையில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி தவறி கீழே விழுந்த வேட்டை தடுப்பு காவலர் பலியானார். அவரது பிறந்த நாள் அன்று இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
வால்பாறை
வால்பாறையில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி தவறி கீழே விழுந்த வேட்டை தடுப்பு காவலர் பலியானார். அவரது பிறந்த நாள் அன்று இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
வேட்டை தடுப்பு காவலர்
வால்பாறையில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மானாம்பள்ளி வனச்சரகத்தில் வேட்டை தடுப்பு காவலராக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தவர் சாலமோன் (வயது 35). இவருக்கும் திருமணமாகி மனைவி, ஒரு பெண் குழந்தை உள்ளனர். இவர் தற்போது மானாம்பள்ளி வனப்பகுதியில் மந்திரி மட்டம் என்ற இடத்தில் கூண்டில் வைத்து வேட்டைக்கு பழகி வரும் புலி கூண்டின் கண்காணிப்பு பணியில் வனப்பணியாளர்களுடன் இணைந்து பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் சாலமோனுக்கு பிறந்தநாள் என்பதால் வீட்டுக்கு வந்தார். பின்னர் நல்லமுடி பகுதியில் உள்ள வனத்துறை சோதனை சாவடியில் பணிபுரிந்து வரும் தனது சக பணியாளர்களை சந்தித்து விட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் வால்பாறைக்கு வந்து கொண்டிருந்தார். சோலையாறு எஸ்டேட் பகுதி அருகில் வந்த போது, சாலையில் இருந்த குழியை கடந்து செல்லும் போது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
போலீசார் விசாரணை
இதில் சாலமோனுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. பின்னர் அவர் சிகிச்சைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். தலையில் ரத்தம் நிற்காமல் தொடர்ந்து வந்து கொண்டே இருந்ததால் தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி சாலமோன் பரிதாபமாக உயிரிழந்தார்.
வால்பாறை போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தநாள் அன்று ஏற்பட்ட விபத்தில், வேட்டை தடுப்பு காவலர் இறந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.