பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது - பெயர் குழப்பத்தில் பெண்ணுக்கு கொலை மிரட்டல்


பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது - பெயர் குழப்பத்தில் பெண்ணுக்கு கொலை மிரட்டல்
x

சென்னையில் பா.ஜ.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். பெயர் குழப்பத்தில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் வருவதாக புகார் எழுந்துள்ளது.

சென்னை

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பா.ஜ.க. பிரமுகர் பாலச்சந்தர் (வயது 30). நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். இந்த கொலை தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச்சேர்ந்த பிரதீப், சஞ்சய், கலைவாணன் மற்றும் ஜோதி ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கொலையாளி பிரதீப் தலைமையில் தான் கொலை திட்டம் தீட்டப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது.

சஞ்சய், பிரதீப்பின் தம்பி ஆவார். கலைவாணன், பிரதீப்பின் உறவினர். ஜோதி, பிரதீப்பின் நண்பர். கொலையாளி பிரதீப் கொடுத்த வாக்குமூலத்தில், என்னையும், என் குடும்பத்தையும் ஒழித்துக்கட்டும் நோக்கத்தோடு பாலச்சந்தர் செயல்படத்தொடங்கினார். முதலில் என்னை சிறைக்கு அனுப்பினார். அடுத்து சிந்தாதிரிப்பேட்டை கிழக்கு கூவம் சாலையில் வசிக்கும், வசந்தா என்ற பெண்ணின் வீட்டை அபகரிக்க முயற்சி செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரில், என் தந்தை தர்கா மோகன், மைத்துனர் தினேஷ் ஆகியோரை ஜெயிலில் அடைக்க பாலச்சந்தர் பின்னணியில் இருந்தார். எந்த வகையிலும் எங்களை வாழ விடாததால், பாலச்சந்தரை தீர்த்துக்கட்டினோம் என்று தெரிவித்தார். கைதான 4 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

வசந்தா என்ற பெண்ணின் வீட்டை அபகரிக்க முயற்சிப்பதாக, கொடுக்கப்பட்ட புகாரில்தான் பிரதீப்பின் தந்தை தர்கா மோகனும், மைத்துனர் தினேசும் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கொலைக்கு இதுதான் முக்கிய காரணமாக அமைந்தது. இதற்கிடையில் கிழக்கு கூவம் சாலையில் வசிக்கும் வசந்திபாய் என்ற பெண்ணுக்கு, வசந்தா என்று நினைத்துக்கொண்டு சிலர் மிரட்டலில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.

வசந்திபாய் என்ற பெண்ணுக்கும், இந்த பிரச்சினைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கிழக்கு கூவம் சாலையில் வசிப்பவர்களுக்கு, இது போல் தொல்லை கொடுப்பவர்களிடமிருந்து போலீசார் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும், என்றும் அந்த பகுதியில் போலீஸ் ரோந்தை தீவிரப்படுத்த வேண்டும், என்றும் அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ரவுடிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தவறியதாக வந்த புகார் அடிப்படையில், சிந்தாதிரிப்பேட்டை சட்டம்-ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் பாலச்சந்தர் கொலை வழக்கில் தினேஷ் என்ற புளிமூட்டை தினேஷ் (26), அவரது தம்பி விக்னேஷ் (22) ஆகியோரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களும் ரவுடிகள்தான் என கூறப்படுகிறது. பாலச்சந்தரின் பாதுகாப்பு போலீசை மிரட்டியதாக இவர்கள் ஏற்கனவே சிறைக்கு சென்று வந்துள்ளனர்.


Next Story