பா.ஜனதா-அ.ம.மு.க. கூட்டணி உறுதியானது: "சி.ஏ.ஏ. சட்டம் யார் குடியுரிமையையும் பறிக்கவில்லை" - டி.டி.வி. தினகரன் பேட்டி


பா.ஜனதா-அ.ம.மு.க. கூட்டணி உறுதியானது: சி.ஏ.ஏ. சட்டம் யார் குடியுரிமையையும் பறிக்கவில்லை  - டி.டி.வி. தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 12 March 2024 8:43 PM GMT (Updated: 13 March 2024 7:04 AM GMT)

தொகுதி பங்கீடு குறித்து மத்திய மந்திரிகளுடன், டி.டி.வி. தினகரன் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பா.ஜனதா-அ.ம.மு.க. கூட்டணி உறுதியானது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி அமைப்பதில் பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. பா.ஜனதா கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய கல்வி மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவதற்காக கடந்த 10-ந்தேதி மத்திய மந்திரிகள் வி.கே.சிங், கிஷன் ரெட்டி ஆகியோர் சென்னை வந்தனர். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அன்று இரவு தங்கியிருந்த அவர்களை முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து, பா.ஜனதாவுடனான கூட்டணியை உறுதி செய்தார். தொகுதிகள் அடங்கிய பட்டியலையும் வழங்கினார்.

அதன் பின்னர் மத்திய மந்திரிகள் 2 பேரும் டெல்லி புறப்பட்டு சென்றனர். இதற்கிடையே, பா.ம.க., அ.ம.மு.க. ஆகிய கட்சிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை இறுதி செய்வதற்காக மத்திய மந்திரிகள் வி.கே.சிங், கிஷன்ரெட்டி ஆகியோர் நேற்று இரவு மீண்டும் சென்னை வந்தனர். கிண்டி நட்சத்திர ஓட்டலில் தங்கிருந்த அவர்களுடன் மாநிலத்தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

இந்தநிலையில் நட்சத்திர ஓட்டலில் தங்கிருந்த மத்திய மந்திரிகளை சந்தித்து கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் நிர்வாகிகள் நேற்று இரவு 12.15 மணிக்கு வந்தனர். இந்த சந்திப்பின்போது பா.ஜனதா-அ.ம.மு.க. கூட்டணி உறுதி செய்யப்பட்டது.

பா.ஜனதாவுடனான பேச்சுவார்த்தைக்குப்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், "வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து கலந்து ஆலோசித்தோம். குக்கர் சின்னம் கோரி விண்ணப்பம் செய்துள்ளோம். அந்த சின்னமே கிடைக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.

குறிப்பிட்ட சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற எந்த நிபந்தனையும் கூட்டணியில் விதிக்கவில்லை. மீண்டும் மோடி பிரதமர் ஆனால் தமிழ்நாட்டுக்கு நன்மை கிடைக்கும் என்பதால் கூட்டணி அமைத்துள்ளோம். மத்திய அரசு கொண்டு வந்துள்ள சி.ஏ.ஏ. சட்டம் யார் குடியுரிமையையும் பறிக்கவில்லை. பேச்சு வார்த்தையில் எந்த நிபந்தனையும் வைக்கவில்லை" என்று அவர் கூறினார்.

இதனிடையே அ.ம.மு.க.வுக்கு எத்தனை தொகுதிகளில், எந்தெந்த இடங்களில் போட்டியிடுகின்றன என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

பா.ம.க.வுடன் இன்று பேச்சுவார்த்தை

பா.ஜனதா கூட்டணியில் அ.ம.மு.க.வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது. அ.ம.மு.க.வை தொடர்ந்து பா.ம.க.வுடன் இன்று (புதன்கிழமை) பேச்சுவார்த்தை நடத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.




Next Story