ஊரப்பாக்கம் அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பா.ஜ.க.வினர், பெண்கள் ஆர்ப்பாட்டம்


ஊரப்பாக்கம் அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பா.ஜ.க.வினர், பெண்கள் ஆர்ப்பாட்டம்
x

ஊரப்பாக்கம் அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பா.ஜ.க. வினர், பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த காரணைப்புதுச்சேரி செல்லும் சாலையில் உள்ள சுடுகாடு எதிரே டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடையை அகற்றக்கோரி நேற்று காட்டாங்கொளத்தூர் மத்திய பா.ஜ.க. மண்டல துணைத்தலைவர் காரணை கே.வி.ராதா தலைமையில் பா.ஜ.க.வினர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பா.ஜ.க.வினரிடம் கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் இன்ஸ்பெக்டரிடம் இந்த சாலை வழியாக பெண்கள் நடந்து செல்வதற்கு அச்சப்படுகின்றனர். மது குடிக்கும் வாலிபர்கள் பெண்களை கேலி, கிண்டல் செய்கின்றனர்.

மேலும் இந்த வழியாக பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் சாலையில் வாகனங்களில் செல்லும் போது குடிமகன்களால் தினந்தோறும் தகராறு ஏற்படுகிறது என்று பெண்கள் ஆவேசமாக தெரிவித்தனர். அப்போது இன்ஸ்பெக்டர் பெண்களிடம் உங்கள் கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதனால் ஆவேசம் அடைந்த பெண்கள், ஒவ்வொரு முறையும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் போது அதிகாரிகள் வந்து இதே கருத்தை சொல்லிவிட்டு செல்கின்றனர். ஆனால் கடையை மூடுவதற்கான நடவடிக்கை எடுப்பதில்லை என்று கூறி மீண்டும் டாஸ்மாக் கடையின் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முருகேசன், வண்டலூர் தாசில்தார் பாலாஜிக்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் பாலாஜி பெண்களிடம் ஒரு மாதம் அவகாசம் கொடுங்கள் என்று பலமுறை கேட்டார்.

ஆனால் பெண்கள், நாங்கள் ஒரு மாதம் அவகாசம் தரமாட்டோம் இன்றே கடையை இழுத்து மூடுங்கள். ஒரு மாதம் கழித்து இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்றி விடுங்கள் என்று தெரிவித்தனர்.

இதற்கு தாசில்தார் நீங்கள் சொல்வது போல் உடனடியாக கடையை மூட முடியாது. ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என்று கேட்டு கொண்டே இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் நீங்கள் எங்களுக்கு ஒரு மாதம் தரவேண்டாம் நாங்கள் உங்களுக்கு ஒரு வாரம் தருகிறோம் அதற்குள் இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதற்கு தாசில்தார் ஒப்புக்கொண்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் டாஸ்மாக் கடை முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் காரணைப்புதுச்சேரி- ஊரப்பாக்கம் செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 50-க்கும் மேற்பட்ட போலீசார் டாஸ்மாக் கடைக்கு பாதுகாப்பு அளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் அருணாச்சலம், நடராஜன், ஆனந்தன், டில்லி குமார், கலாராணி, கிருஷ்ணராஜ், கனகா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி கடந்த மே மாதம் 14-ந்தேதி இந்த பகுதியை சேர்ந்த பெண்கள் டாஸ்மாக் கடை அருகில் இருந்த பாரை சூறையாடிய சம்பவம் மற்றும் சில மாதங்களுக்கு முன்பு ஒரு வாலிபர் பாரில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story