பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிப்பு


பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிப்பு
x
தினத்தந்தி 3 Oct 2023 4:15 PM IST (Updated: 3 Oct 2023 4:20 PM IST)
t-max-icont-min-icon

அண்ணாமலை தலைமையில் நாளை மறுநாள் பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அண்ணாமலை தற்போது டெல்லி சென்றுள்ளதால், இந்த ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள பா.ஜ.க. மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், பா.ஜ.க. நிர்வாகிகள் சுதாகர் ரெட்டி, வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுதாகர் ரெட்டி, இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி குறித்து எதுவும் பேசப்படவில்லை என்றும், கூட்டணி தொடர்பாக பா.ஜ.க. தலைமைதான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்.

கட்சியின் அமைப்பு ரீதியான செயல்பாடுகள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் அமைப்பு ரீதியாக பா.ஜ.க. பூத் கமிட்டி அளவில் வளர்ந்து வருகிறது என்று தெரிவித்தார். மேலும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நாளை மறுநாள் (5-ந்தேதி) பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.


Next Story