பா.ஜ.க. பிரமுகர் வெடிகுண்டு வீசி படுகொலை: பேரூராட்சி கவுன்சிலர் உள்பட 9 பேர் கோர்ட்டில் சரண்


பா.ஜ.க. பிரமுகர் வெடிகுண்டு வீசி படுகொலை: பேரூராட்சி கவுன்சிலர் உள்பட 9 பேர் கோர்ட்டில் சரண்
x

பா.ஜ.க. பிரமுகர் வெடிகுண்டு வீசி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரூராட்சி கவுன்சிலர் உள்பட 9 பேர் கோர்ட்டில் சரணடைந்துள்ளனர். தொழில் போட்டி காரணமாக கொலை நடந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரத்தை சேர்ந்தவர் பி.பி.ஜி.டி.சங்கர் (வயது 42). இவர் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்த நிலையில், பா.ஜ.க.வின் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாநில பொருளாளராகவும் பதவி வகித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இவர், சென்னை கொளத்தூரில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக நசரத்பேட்டை சிக்னல் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்து வழிமறித்த மர்ம கும்பல் சங்கரின் கார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதனால் படுகாயமடைந்த அவர் உயிரை காப்பாற்றி கொள்ள காரில் இருந்து இறங்கி தப்பி ஓட முயன்றார்.

ஆனால் அவரை விடாமல் கொலை கும்பல் ஓட, ஓட அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவத்தை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இதையடுத்து, சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

உடனே போலீசார் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த சங்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக நசரத்பேட்டை போலீசார் 5 தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில், சங்கர் கொலை செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

சம்பவத்தன்று கொளத்தூரில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு காரில் சங்கர் தனியாக வருவதையறிந்த கொலை கும்பல் அவரை கொளத்தூரில் இருந்து 2 கார்களில் பின் தொடர்ந்து வந்துள்ளனர்.

நசரத்பேட்டை சிக்னலில் கார் நின்றபோது, காரில் இருந்து இறங்கிய கும்பல் காரின் மீது 3 நாட்டு வெடிகுண்டுகளை வீசி உள்ளனர். இதனால் காயத்துடன் காரில் இருந்து கத்தியுடன் இறங்கியுள்ளார். அப்போது, அவர் கையில் கத்தியை வைத்து கொண்டு தன்னை தாக்க வந்தவர்களை வெட்ட முயன்று அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். அப்போது பின் தொடர்ந்து சென்ற மர்மகும்பல் காரை விட்டு மோதி கீழே தள்ளி அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூரில் சங்கரின் நெருங்கிய நண்பரான பி.பி.ஜி. குமரன் என்பவரும் இதே பாணியில் கொலை செய்யப்பட்டார். இந்த சூழ்நிலையில், பி.பி.ஜி.குமரன் கொலைக்கு பழிவாங்கும் விதமாக ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் ஒன்றிய சேர்மன் மண்ணூர் வெங்கடேசனை, சங்கர் தரப்பினர் வெட்டி படுகொலை செய்தனர். எனவே நேற்றுமுன்தினம் வெங்கடேசனின் நினைவு நாள் என்பதால் அதற்கு பழிவாங்கும் விதமாகவும் அதே நாளில் சங்கரை வெட்டி கொலை செய்தனரா? என பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை செய்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை வழக்கில் சம்பவ இடத்தில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி கவுன்சிலர் சாந்தகுமாரின் உருவம் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இந்த கொலையை அவர் செய்தாரா? என்ற கோணத்தில் போலீசாரை அவர் தீவிரமாக தேடி வந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி கவுன்சிலர் சாந்தகுமார், ஜெகன், குணா, சரத்குமார், ஆனந்த், சாந்தகுமார், சஞ்சு, உதயகுமார், தினேஷ் உள்ளிட்ட 9 பேர் இந்த கொலை வழக்கு சம்பந்தமாக எழும்பூர் கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி கவுன்சிலரான சாந்தகுமார் அந்த பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் உதிரிபாகங்களை எடுத்து வியாபாரம் செய்வதில், சங்கருடன் முன்விரோதம் இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக தனது கூட்டாளிகளை ஏவி சங்கரை கொலை செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த நிலையில், சரணடைந்துள்ள 9 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். போலீஸ் விசாரணைக்கு பின்னர், கொலைக்கான முக்கிய காரணம் என்ன? இதற்கு பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலையான பி.பி.ஜி.டி.சங்கர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story