பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்கு எதிரான கொடும்போக்கினைக் கைவிடுவதுடன், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - சீமான்


பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்கு எதிரான கொடும்போக்கினைக் கைவிடுவதுடன், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - சீமான்
x

வேளாண் பெருங்குடி மக்கள் முன்னெடுக்கும் நாடு தழுவிய அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தனது முழு ஆதரவை அளிக்கிறது.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

டெல்லியில் உயிரைப் பிசைந்தெடுக்கும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கையை வலியுறுத்தி, அமைதி வழியில் மீண்டும் போராடிவரும் விவசாயிகளின் ஈகமானது மிகுந்தப் போற்றுதலுக்குரியது.

கொரோனா கொடுந்தொற்று காலத்தில்கூட ஒட்டுமொத்த நாட்டிற்கும் உணவளித்த விவசாயிகளை நடுச்சாலையில் போராடவிட்டது மட்டுமின்றி அவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசியும், காவல்துறையை ஏவியும் சிறிதும் இரக்கமின்றித் தாக்குதல் நடத்தியிருக்கும் மோடி அரசின் கொடுங்கோன்மைச் செயலானது வன்மையான கண்டனத்திற்குரியது.

விவசாயப் பெருங்குடி மக்களை வேளாண்மையைவிட்டே அகற்றும் வகையில் தனிப்பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக்கோரி கடந்த 2020 ம் ஆண்டு டெல்லியில் வேளாண் பெருமக்கள் ஒன்றுகூடி 13 மாதங்களுக்கும் மேலாக முன்னெடுத்த வரலாறு காணாத மாபெரும் புரட்சிப்போருக்கு அடிபணிந்தும், பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டும் வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற்றதுடன் அவர்களின் நியாயமான வாழ்வாதாரக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்தது.

ஆனால், மூன்று ஆண்டுகளாகியும் வேளாண் பெருங்குடிகள் முன்வைத்த குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயக்கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருவது வெட்கக்கேடானதாகும்.

வேளாண்மையை முழுக்க முழுக்கத் தனியார்மயமாக்கி, நாட்டிலுள்ள விவசாயிகளை பெருமுதலாளிகளின் கூலிகளாக மாற்ற முயலும் மோடி அரசின் கொடுமைகளுக்கு எதிராக வேளாண்மையைப் பாதுகாக்கும் பொருட்டு விவசாயிகள் ஒன்றுதிரண்டு அறவழியில் போராடி வருகின்றனர்.

வேளாண் பெருங்குடி மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிமடுக்காமல் அலட்சியம் செய்வதுடன், போராடும் விவசாயிகள் மீது பா.ஜ.க. அரசு அடக்குமுறையை ஏவுவது எதேச்சதிகாரபோக்கின் உச்சமாகும். இதனைக் கண்டித்து நாடு முழுவதுமுள்ள வேளாண் அமைப்புகள், சனநாயக இயக்கங்கள், அரசியல் கட்சிகள் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவளித்து அவர்களுக்குப் பின்னால் அணிதிரள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்கு எதிரான கொடும்போக்கினைக் கைவிடுவதுடன், அவர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். மேலும், வேளாண் பெருங்குடி மக்கள் முன்னெடுக்கும் நாடு தழுவிய அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தனது முழு ஆதரவை அளிப்பதுடன், அவர்களின் நியாயமான கோரிக்கைகள் வெல்லும்வரை துணைநிற்கும் என்றும் உறுதியளிக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story