தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை -அண்ணாமலை நம்பிக்கை


தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை -அண்ணாமலை நம்பிக்கை
x

தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

சென்னை,

பா.ஜ.க.வின் 44-வது ஆண்டு தொடக்க நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நடந்தது. மாநில தலைவர் அண்ணாமலை கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர், பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் உரை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நார்த் போக்ஸ் சாலையில் உள்ள சுவரில் தாமரை சின்னத்தை அண்ணாமலை வரைந்தார்.

இந்த நிகழ்ச்சியில், நடிகை நமீதா, நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ, மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அப்போது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பேச்சாளர் துரைக்கண்ணு தலைமையில் 15 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

இதைத்தொடர்ந்து, அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

1984-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அப்போது, பா.ஜ.க.வை கேலியும், கிண்டலும் செய்தார்கள். நாடாளுமன்றத்தில் எங்களது எம்.பி.க்கள் பேச முயலும் போதெல்லாம் கிண்டல் செய்து பேச விடமாட்டார்கள். எங்களுக்கு ஒரு காலம் வரும். அப்போது, இந்தியாவை நாங்கள் ஆட்சி செய்வோம் என்று சொன்னோம். 2023-ம் ஆண்டில் பா.ஜ.க.வின் வளர்ச்சியை அனைவரும் பார்த்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் 4 எம்.எல்.ஏ.க்களை பெற்றுள்ளோம்.

தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்

கடினமான சூழ்நிலையில் பா.ஜ.க. வளர்ந்துகொண்டு வருகிறது. இந்தியாவின் அனைத்து இடத்திலும் பா.ஜ.க.வை மக்கள் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். 43 ஆண்டுகளில் எந்த ஒரு கட்சியும் இந்த அளவுக்கு வளர்ச்சி அடையவில்லை. இது தனிப்பெரும் சாதனை.

இதேபோல, தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை. நிச்சயமாக அது நடக்கும். பிரதமர் மோடியின் விருப்பம் களத்தில் எதிரொலித்து வருகிறது. கடுமையாக உழைக்கும் தொண்டர்கள் எங்களிடம் இருக்கிறார்கள். டெல்டா பகுதிகள் தமிழகத்தின் முக்கியமான இடங்கள். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது சுரங்கத்திற்கான அனுமதியை கொடுத்துவிட்டது. அதன்பிறகு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி உள்ளது. தற்போது, இதை நடைமுறைப்படுத்துவதற்கான டெண்டர் அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் நமது கவனத்திற்கு வந்த உடன் சட்டமன்றத்தில் இதுகுறித்து நாங்கள் பேசியுள்ளோம்.

நல்ல செய்தி

மேலும், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு கொண்டுவராது. இதுக்கு முன்பாக அந்த பகுதியில் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் வழங்கியதே பிரச்சினையாக இருக்கிறது. கூடிய விரைவில் நல்ல செய்தி வரும்.

ஏப்ரல் 14-ந்தேதி தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக சொல்லியிருந்தேன். அன்றைய தினம் தி.மு.க.வின் முந்தைய ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்களையும் வெளியிட உள்ளோம். இது அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.

2ஜி வழக்கையும் மத்திய அரசு துரிதப்படுத்தி உள்ளது. யாரும் எங்கேயும் தப்பித்துவிட முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story