திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க. அராஜகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்


திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க. அராஜகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
x

திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க. அராஜகத்தை கண்டித்து சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

சென்னை

திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க.வின் அராஜகத்தை கண்டித்து நேற்று மாலை சென்னை வண்ணாரப் பேட்டை தங்கசாலை மணிக்கூண்டு அருகே சென்னை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா, திராவிட கழக துணைத்தலைவர் கலிபூங்குன்றன், மே17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:-

காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்ற ஆட்சியை செயல்படுத்தியது. ஆனால் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு மதவாதத்தை தூண்டும் விதமாக செயல்படுகிறது. இந்திய அரசு மதம் சார்ந்த அரசாக வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நோக்கமாகும்.

இந்த தேசத்தின் பெயரை மாற்றுவது, தலைநகரை மாற்றுவது இதுதான் அவர்களின் கனவு திட்டமாக உள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற துடிக்கிறார்கள். 2024-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் வெற்றி பெற்று இதையெல்லாம் சாதிக்கலாம் என்று கனவு காண்கிறார்கள். அது ஒரு போதும் பலிக்காது.

மத்திய அரசு என்பது மாநில அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஆனால் அவர்கள் மாநில அரசுக்கு எதிராகவே செயல்படுகிறார்கள். 2024-ம் ஆண்டு தேர்தல் ஆபத்தானது. தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து பா.ஜ.க.வுக்கு எதிராக செயல்பட வேண்டும். ரூ.500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததுபோல் திடீரென இந்திய அரசியல் அமைப்பு சட்டம் செல்லாது என்றும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு அறிவிக்க கூடும். இதனை தோழமை கட்சிகள் ஒன்று சேர்ந்து முறியடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது:-

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 என வெற்றி பெறுவதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். அதிகாரத்தை பயன்படுத்தி அதை பறிப்போம் என்று அவர் சொல்லவில்லை. ஆனால் பா.ஜ.க. அதிகாரத்தை பயன்படுத்தி பறிப்ே்பாம் என்ற நிலையில் இருக்கிறார்கள். பா.ஜ.க. சுதந்திரமாக செயல்படாமல் ஆர்.எஸ்.எஸ். உத்தரவுபடி செயல்படும் கட்சியாக உள்ளது. பா.ஜ.க. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கட்சி என்ற நோக்கத்தில்தான் செல்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story