"பாஜகவினர் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்" - அமைச்சர் செந்தில் பாலாஜி
பாஜகவினர் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
கோவை,
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பெட்ரோல், மண்ணெண்ணெய் குண்டு வீச்சு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கோவை, மதுரை, கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் பாஜக மற்றும் இந்து மத அமைப்புகள் தொடர்புடைய இடங்களில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
கோவையில் பாஜகவினர் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்றால், குறிப்பாக அவர்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ளனர். அவர்களுக்கான கோரிக்கைககள் இருந்தால் மாவட்ட ஆட்சியர் அல்லது காவல் துறை அதிகாரிகளிடம் முன் வைக்கலாம்.
ஆனால் அதை விட்டு விட்டு சாலை மறியலில் ஈடுபடுவது சட்டம் - ஒழுங்கை சீர்குலைப்பதில் ஈடுபட்டவர்களை மட்டுமே காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பாஜகவினர் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். சமூக வலைதளங்களில் கோவையில் ஏதோ ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவுவது போல தகவல்கள் பரவுகின்றன.
கோவையில் எந்த அசம்பாவித சம்பவங்களும் நடக்கவில்லை. மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.