தமிழக அரசை பற்றி பேசுவதற்கு பா.ஜனதாவுக்கு தகுதி கிடையாது-பாலகிருஷ்ணன் பேட்டி
தமிழக அரசை பற்றி பேசுவதற்கு பா.ஜனதாவுக்கு எந்தவிதமான தகுதியும் கிடையாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
"தமிழக அரசை பற்றி பேசுவதற்கு பா.ஜனதாவுக்கு எந்தவிதமான தகுதியும் கிடையாது" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
பேட்டி
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தென்காசியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
பல்கலைக்கழக துணைவேந்தா்களை தமிழக அரசே நியமனம் செய்துகொள்ளவும், தேவைப்பட்டால் அவா்களை நீக்குவதற்கும் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றி அதை ஆளுநரின் ஒப்புதலுக்காக கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசு அனுப்பியது.
தமிழக கவர்னர் 4 மாதங்களுக்கு பிறகு அதற்கு விளக்கம் கேட்டு தமிழக செயலருக்கு கடிதம் எழுதியுள்ளாா். மாநில அரசு துணைவேந்தா்களை நியமனம் செய்தால் அதில் பல அரசியல் தலையீடு இருக்கும் என கவர்னர் தெரிவித்துள்ளாா். இந்தியாவில் பல மாநிலங்களில் மாநில அரசே துணைவேந்தா்களை நியமித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் நியமித்தால் அரசியல் தலையீடு வந்துவிடுமா, ஆளுநா்கள் துணைவேந்தா்களை நியமித்தால் அரசியல் தலையீடு இல்லையா. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்திற்கு ஒப்புதல் தரவேண்டுமே தவிர அதற்கு மாறாக ஆளுநா் கூறுவது பொருத்தமற்றது.
தகுதி கிடையாது
மத்திய அரசு நாள்தோறும் மக்களை பாதிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மின்சார வாரியம் பாக்கி வைத்துள்ளதாகக் கூறி 13 மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்க முடியாது என முடிவு மேற்கொண்டுள்ளது. மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியை வசூலித்துவிட்டு, மாநில அரசுகளுக்கு பல மாதங்கள், வருடங்கள் கழித்து கொடுக்கின்றனா்.
மத்திய அரசு மாநில உரிமைகளை தட்டிப்பறிப்பது, மக்களுக்கு கூடுதல் சுமைகளை உருவாக்குவது போன்ற காரியங்களை தொடா்ந்து மேற்கொண்டு வருவது கண்டனத்திற்குரியது. அ.தி.மு.க. ஆட்சியின் போது அ.தி.மு.க.வுடன் 10 ஆண்டு காலம் பா.ஜ.க. கூட்டணி வைத்திருந்தது. அப்போது அந்த ஆட்சியில் நடந்த தவறுகள் குறித்து பா.ஜ.க. எந்த குறைகளையும் கூறவில்லை. தமிழக அரசையும், தமிழக முதல்வா் குறித்தும் பேசுவதற்கு பா.ஜ.க.விற்கு எந்த விதமான தகுதியும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் பி.சுகந்தி, மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் அயூப்கான், வேலுமயில், லெனின்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.