"தமிழ்நாட்டில் பாஜகவுக்கு மக்களிடையே வரவேற்பு இல்லை" - திருமாவளவன் பேட்டி
தமிழ்நாட்டில் பாஜகவுக்கு மக்களிடையே வரவேற்பு இல்லை என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
வேலூர்,
வேலூர் அண்ணா சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
10 சதவீத இட ஒதுக்கீடு என்பது அரசியல் அமைப்பு சட்டத்தை நீர்த்துப்போக செய்கிற செயல். உயர் வகுப்பில் பின்தங்கிய சமூகமாக இருக்கிற ஏழைகளுக்கு இலவச கல்வி, கல்வி கடனுதவி, தொழில் தொடங்க கடன் உதவி உள்ளிட்டவைகளை அரசு உதவி செய்ய வேண்டுமே தவிர இட ஒதுக்கீடு அளிக்கக்கூடாது. 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.
பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் உள்ள கவர்னர்கள் அந்த மாநில அரசுகளை மதிக்காமல் அரசியல் பேசி வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு மக்களிடையே வரவேற்பு இல்லை. சமூக ஊடகங்கள் மட்டுமே பாஜகவை தாங்கி பிடிக்கின்றன.
பாஜகவை பார்த்து திமுக பயப்படுகிறது என்ற எடப்பாடி பழனிசாமியின் கூற்று, பாஜகவின் குரலாக பார்க்க வேண்டும். அவர் அதிமுகவை கரைய விட்டு விட்டார், கைவிட்டு விட்டார். எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க. நிர்வாகி போல் செயல்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.