கோவை சம்பவத்துக்காக என்ஐஏ முதலில் அண்ணாமலையை விசாரிக்க வேண்டும்- அமைச்சர் செந்தில்பாலாஜி


கோவை சம்பவத்துக்காக  என்ஐஏ முதலில் அண்ணாமலையை விசாரிக்க வேண்டும்- அமைச்சர் செந்தில்பாலாஜி
x
தினத்தந்தி 27 Oct 2022 7:00 AM GMT (Updated: 27 Oct 2022 7:02 AM GMT)

கார் சிலிண்டர் வெடிப்பு போன்ற சம்பவம் நடந்திருக்கக் கூடாது. நடந்த சம்பவம் வருத்தத்திற்கு உரியது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

கோவை

கோவையில் மேற்கு மண்டல ஐஜி, மாவட்ட கலெக்டர், போலீஸ் கமிஷனர்எஸ்.பி ஆகியோருடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார். பின்னர் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

கோவை சம்பவங்கள் தொடர்பாக ஒரு கட்சியினர் (பா.ஜ.க.) சொல்லும் செய்திகளை பெரிதுபடுத்த வேண்டாம். கோவையில் தற்போது அமைதி நிலவுகிறது.கோவை கார் வெடிப்பு சம்பவம் நடந்த இடத்தில் 12 மணி நேரத்தில் இயல்பு நிலை திரும்பியது.

வெடி விபத்து சம்பவம் தொடர்பாக காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளது. டிஜிபி-நேரடியாக வந்து சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

குற்றம் செய்தவர்கள்,அவர்கள் பயன்படுத்திய வாகனம் ஆகியவற்றை காவல்துறை விரைந்து கண்டுபிடித்துள்ளார்கள்.

கார் சிலிண்டர் வெடிப்பு போன்ற சம்பவம் நடந்திருக்கக் கூடாது. நடந்த சம்பவம் வருத்தத்திற்கு உரியது. அதற்காக மக்களை அச்சுறுத்தக்கூடாது. தமிழகம் முழுவதும் இருப்பது போன்ற தோற்றத்தை எழுதக்கூடாது.

தீபாவளி பண்டிகைக்கு முதல்நாள் சம்பவம் நடந்தாலும் காவல்துறையினர் துரித நடவடிக்கையால் பொதுமக்கள் அச்சமின்றியும் பதற்றமின்றியும் தீபாவாளி பண்டிகையை கொண்டாடினர்.

கோவை சம்பவம் தொடர்பாக புலன் விசாரணை தொடங்கும் முன்பே சில தகவல்களை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்தார். அவருக்கு எப்படி இந்த தகவல்கள் கிடைத்தன? கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த நபர் குறித்த தகவல்கள் அண்ணாமலைக்கு முன்கூட்டியே எப்படி தெரியும்?

கோவை சம்பவம் தொடர்பாக மாநிலம் கடந்தும் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. அதனால் என்.ஐ.ஏ. விசாரணைக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார்.

என்.ஐ.ஏ. முதலில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் கோவை சம்பவம் தொடர்பாக விசாரிக்க வேண்டும். அண்ணாமலைக்கு கோவை சம்பவம் தொடர்பாக முன்கூட்டியே தெரியுமா? அல்லது அப்படி ஒரு சம்பவம் நடக்க வேண்டும் என்று விரும்பினாரா? என என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும்.

கோவை சம்பவத்துக்காக போராட்டம் நடத்தும் பாஜக, மக்கள் பிரச்சினைக்காக ஏன் போராடவில்லை?.

தமிழ்நாட்டில் கட்சியை வளர்ப்பதற்காக பா.ஜ.க தரம் தாழ்ந்து அரசியலில் ஈடுபடக் கூடாது ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி உயிரிழந்தபோது எத்தனை பா.ஜ.க. தலைவர்கள் அதுபற்றி பேசினார்கள். மக்கள் நலத்திட்டங்களை மேற்கொள்வதன் மூலம் தான் கட்சியை வளர்க்க முடியும்.

மதுரையில் ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபோது அண்ணாமலை அரசியல் செய்தார்;

விபத்தில் ராணுவ தலைமை தளபதி உயிரிழந்த போது,பா.ஜ.க. தலைவர்கள் யாரும் வராதது ஏன்.

பத்திரிகைகள் சில கட்சிகளை வளர்க்கிறார்கள். அவர்களாகவே வளரட்டும் நீங்கள் வளர்க்க வேண்டாம்.

அரசியல் காரணங்களுக்காக பா.ஜ.க. பந்த் அறிவித்துள்ளது; நூல் விலையேற்றம் மற்றும் ஜி.எஸ்.டி யால் தொழில்நிறுவனங்கள் பாதிக்கபடும் போது ஏன் பந்த் அறிவிக்கவில்லை. பந்த் என்ற பெயரில் பொதுமக்களை அச்சுறுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவையில் காரில் வெடிகுண்டு வெடிக்கவில்லை. மக்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்த வேண்டாம். கோவை மாவட்டத்தை தமிழ்நாடு அரசு புறக்கணிக்கவில்லை. மற்ற மாவட்டங்களை விட கோவை மாவட்டத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார் என கூறினார்.


Next Story