அதிமுகவின் இரு அணிகளும் போட்டி என அறிவிப்பு..இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என முடிவெடுக்க முடியாமல் பா.ஜ.க. திணறல்


அதிமுகவின் இரு அணிகளும் போட்டி என அறிவிப்பு..இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என முடிவெடுக்க முடியாமல் பா.ஜ.க. திணறல்
x
தினத்தந்தி 29 Jan 2023 7:53 AM IST (Updated: 29 Jan 2023 7:54 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வுக்கு 2 தலைவர்கள் சொந்தம் கொண்டாடுவதால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவெடுக்க முடியாமல் பா.ஜ.க. திணறிவருகிறது. நாளை (திங்கட்கிழமை) மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி அண்ணாமலை முடிவை அறிவிக்க இருக்கிறார்.

சென்னை,

அ.தி.மு.க.வுக்கு 2 தலைவர்கள் சொந்தம் கொண்டாடுவதால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவெடுக்க முடியாமல் பா.ஜ.க. திணறிவருகிறது. நாளை (திங்கட்கிழமை) மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி அண்ணாமலை முடிவை அறிவிக்க இருக்கிறார்.

தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணி சார்பில், மறைந்த காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவின் தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுவிட்டார்.

ஆனால், பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.க.வில்தான் வேட்பாளரை அறிவிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. ஏற்கனவே, கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட த.மா.கா. வேட்பாளர் யுவராஜா இடைத்தேர்தலில் பின்வாங்கியதால், அ.தி.மு.க.வே வேட்பாளரை களம் இறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆனால், அ.தி.மு.க.வுக்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சொந்தம் கொண்டாடி வருவதால், யாருடைய தலைமையில் அ.தி.மு.க. இயங்குகிறது என்பது கூட்டணி கட்சி தலைவர்களுக்கே தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

இதற்கிடையே, இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டாலும், சுயேச்சை சின்னத்தில் வேட்பாளரை போட்டியிட செய்ய எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார். ஓ.பன்னீர்செல்வமும் வேட்பாளரை களம் இறக்க ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

காங்கிரஸ், தே.மு.தி.க., அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் வேட்பாளரை ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில், நாம் தமிழர் கட்சியும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வேட்பாளரை அறிவிக்க இருக்கிறது. வேட்புமனு தாக்கல் தொடங்க இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில், அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்த சிக்கல், தேசிய அளவில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பா.ஜ.க.வுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. யாருடைய தலைமையில் அ.தி.மு.க. இயங்குகிறது என்பது உறுதியானால்தான், இடைத்தேர்தலில் அவர்களுக்கு ஆதரவு அளிக்க முடியும் என்று பா.ஜ.க. கருதுகிறது. ஆனால், இரு தலைவர்களும் நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க. என்று கூறிவருவதால், யாருக்கும் ஆதரவை தெரிவிக்க முடியாமல் பா.ஜ.க. திணறிவருகிறது.

இந்த நிலையில், மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துபேசி முடிவெடுக்க தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். இதற்காக, நாளை (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. மாநில தலைமையகமான கமலாலயத்தில், மாநில நிர்வாகிகள், அனைத்து மாவட்ட தலைவர்கள் கூட்டம் கூட்டப்படுகிறது.

இந்த கூட்டத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க. வேட்பாளர்களில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட இருக்கிறது.


Next Story