மீண்டும் மோடி ஆட்சி அமைந்தால் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்


மீண்டும் மோடி ஆட்சி அமைந்தால் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்
x

3-வது முறையாக மோடி ஆட்சி அமைந்தால் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்று குமரலிங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசினார்.

திருப்பூர்

3-வது முறையாக மோடி ஆட்சி அமைந்தால் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்று குமரலிங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசினார்.

பாதயாத்திரை

என் மண், என் மக்கள் என்ற முழக்கத்துடன் பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை அடுத்த கொழுமம் பகுதியில் கோட்டை மாரியம்மன் கோவில் முன்பிருந்து பாத யாத்திரையை தொடங்கினார். முன்னதாக மலைவாழ் மக்கள் தங்களது பாரம்பரிய நடனத்துடன் அவருக்கு வரவேற்பளித்தனர்.

இதைத்தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக நடைபயணம் மேற்கொண்ட அவர் குமரலிங்கம் பஸ் நிலையத்தில் கூடியிருந்த கூட்டத்தின் நடுவில் பேசியதாவது:-

3-வது முறையாக ஆட்சி அமைப்பார்

'குமண மன்னன் ஆண்ட குமரலிங்கம் மண் ஆன்மிகமும் தேசியமும் கலந்தது. காசியிலிருந்து ஒரு ஆண்டு காலம் மாட்டு வண்டியில் கொண்டு வரப்பட்ட லிங்கத்தைக் கொண்ட, 1000 ஆண்டு கடந்த காசி விஸ்வநாதர் கோவில் இந்த ஊரின் சிறப்பு. கர்மவீரர் காமராஜர் தமிழகத்தின் முதல்-அமைச்சராக 9 ஆண்டுகள் இருந்தார். அவர் எத்தனை அணைகள் கட்டலாம் என்று யோசித்தார். அவர் தமிழகத்தில் 12 அணைகள் கட்டினார்.

இன்றைய ஆட்சியாளர்கள் எத்தனை டாஸ்மாக்குகள் திறக்கலாம். எப்படி வருமானத்தை ஈட்டலாம் என்று யோசிக்கிறார்கள். தமிழகத்தில் தி.மு.க. 6-வது முறையாக ஆட்சியில் இருக்கிறது. அவர்கள் காலத்தில் வெறும் 5 அணைகள் கட்டப்பட்டது. ஏனென்றால் தி.மு.க.வைப் பொறுத்தவரை அணை கட்டாமல் இருந்தால் தான் மணல் அள்ள முடியும். மண் எடுக்க அனுமதி கொடுக்காததால்தான் கிராம நிர்வாக அலுவலரை அலுவலகத்துக்குள் புகுந்து வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். 9 ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் பாரதப்பிரதமர் மீண்டும் 3-வது முறையாக ஆட்சியமைப்பார்.

3-வது பெரிய பொருளாதார நாடு

உறுதியான, உலகமே திரும்பிப் பார்க்கக் கூடிய, லஞ்ச லாவண்யம் இல்லாத ஆட்சியை இப்போது நடத்திக் கொண்டிருக்கிறார்.

2014-ல் உலகத்தில் 11-வது பொருளாதார நாடாக இருந்த இந்தியா இன்று 5-வது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது. 3-வது முறையாக மோடி ஆட்சியமைத்தால் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும்.

2047-க்குள் உலகத்தில் முதன்மை நாடாக இந்தியா மாறும். அவர் 2014-ல் 283 எம்.பி.க்களுடன் ஆட்சியமைத்தார்.

2019-ல் 303 எம்.பி.களுடன் ஆட்சியமைத்தார். வரும் தேர்தலில் 400 எம்.பி.களுடன் ஆட்சியமைப்பார்' இவ்வாறு அவர் பேசினார்.


Related Tags :
Next Story