தி.மு.க. அரசின் மகளிர் உரிமை தொகை திட்டம் ஏமாற்றும் திட்டம்


தி.மு.க. அரசின் மகளிர் உரிமை தொகை திட்டம் ஏமாற்றும் திட்டம்
x

தமிழகத்தில் தி.மு.க. அரசின் மகளிர் உரிமை தொகை திட்டம் ஏமாற்றும் திட்டம் என்று உடுமலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசினார்.

திருப்பூர்

தமிழகத்தில் தி.மு.க. அரசின் மகளிர் உரிமை தொகை திட்டம் ஏமாற்றும் திட்டம் என்று உடுமலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசினார்.

அண்ணாமலை பாதயாத்திரை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் என் மண் என் மக்கள் யாத்திரை ராஜகாளியம்மன் கோவில் பகுதிகளில் தொடங்கி உடுமலை நகரில் முக்கிய வீதிகளான பழைய பஸ் நிலையம், பெரிய கடை வீதி, தளி ரோடு வழியாக வந்தது. இதில் தமிழக பா..ஜ.க. தலைவர் அண்ணாமலை பாதயாத்திரையாக வந்தார். பின்னர் உடுமலை மத்திய பஸ் நிலையம் பகுதியில் அமைக்கப்பட்ட பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மகளிர் உரிமை திட்டம்

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இந்தியா மிகவும் பின்தங்கி காணப்பட்ட நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் பாரத பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா அசுர வளர்ச்சி பெற்று உள்ளது. குறிப்பாக அண்மையில் நடைபெற்ற பன்னாட்டு தலைவர்கள் ஒருங்கிணைந்து ஜி-20 மாநாடு வெற்றிகரமாக நடத்தியதை கூறலாம். மேலும் தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி குடும்ப ஆட்சி என கூறலாம். தமிழக முதல்-அமைச்சர் அப்பா, மகன் அமைச்சர், தங்கை எம்.பி. மற்றும் உறவினர்களுக்கு முக்கிய பதவிகள் என குடும்பத்தினர் மட்டும் ஆட்சி செய்யும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தற்போது மக்களை ஏமாற்றும் விதமாக மகளிர் உரிமை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக 6 மாதம் மட்டும் செயல்படுத்தும் திட்டமாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை, இந்தியாவிலேயே அதிக கடன் பெற்ற மாநிலமாக தற்போது தமிழகம் உள்ளது.

சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது

மேலும் சட்டம்-ஓழுங்கு மிகவும் சீர்கெட்டு உள்ளது. குறிப்பாக பல்லடத்தில் ஒரே இரவில் நான்கு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் அரசு மதுபான கடையை நம்பி ஆட்சி செய்யும் ஒரே அரசு தி.மு.க. அரசு தான். முன்னாள் அமைச்சர் காமராஜர் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணையை கட்டிய நிலையில் தற்போது உள்ள தி.மு.க அரசு டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டுள்ளது.

உடுமலையில் கஞ்சா விற்பனை இரவு பகலாக நடைபெற்று வருகிறது. பல இடங்களில் சட்டத்திற்கு புறம்பாக அரசு மதுபான விடுதிகள் செயல்பட்டு வருவதால் குற்ற செயல்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இவற்றை தடுக்க வேண்டும்.

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைக்க உரிய நிதி ஒதுக்க வேண்டும். உடுமலை அருகே வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் வனவிலங்குகளின் தொந்தரவு அதிகமாக காணப்படுகிறது விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ள நிலையில் வனத்துறை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் கோவை மாவட்ட கோட்ட பொறுப்பாளர் முருகானந்தம், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி, மாநில ஓ.பி.சி. அணி செயலாளர் குட்டியப்பன், முன்னாள் எம்.பி.கார்வேந்தன், மாநில விவசாய அணி செயலாளர் நாகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிஸ்வரி கந்தசாமி, திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் வடுகநாதன், மாவட்ட செயலாளர் கலா, உடுமலை நகர பா.ஜ.க. தலைவர் கண்ணாயிரம், ஒன்றிய தலைவர்கள் மோகன் குமார், சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story