பா.ஜனதா கட்சியினர் போராட்டம்
ஆத்தூர், மேட்டூரில் பா.ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக சரஸ்வதி எம்.எல்.ஏ. உள்பட 414 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆத்தூர், மேட்டூரில் பா.ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக சரஸ்வதி எம்.எல்.ஏ. உள்பட 414 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆத்தூர்
சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவருடன் இருந்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோரை பதவி நீக்கம் செய்யக்கோரி சேலம் கிழக்கு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் ஆத்தூர் பழைய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன் தலைமையில் ஏராளமானவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என்று போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாருக்கும், பா.ஜனதா கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 19 பெண்கள் உள்பட 180 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
மேட்டூர்
பா.ஜனதா கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பில் மேட்டூரில் மீனாட்சி சொக்கநாதர் ஆலயம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. மேட்டூர் நகர தலைவர் கணேசன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் சரஸ்வதி எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் சுதிர் முருகன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
இதில் மாவட்ட துணைத் தலைவர் ரவி, மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், மாவட்ட மகளிர் அணி தலைவர் மகேஸ்வரி உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 234 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் இரவு விடுவிக்கப்பட்டனர்.