தடையை மீறி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்; 50 பேர் கைது


தடையை மீறி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்; 50 பேர் கைது
x

சிதம்பரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்

சிதம்பரம்

கடலூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இந்து தர்மத்தையும், இந்து சனாதானத்தையும் இழிவாக பேசி இந்து மக்களை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டதை கண்டித்தும், அவர் பதவி விலக வலியுறுத்தியும் சிதம்பரம் தில்லை காளிஅம்மன் கோவில் வளாகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்வதற்காக பா.ஜ.க.வினர் நேற்று மாலை ஊர்வலமாக சென்றனர். வடக்குமெயின் ரோட்டில் தில்லையம்மன் கோவில் நுழைவுவாயில் அருகே வந்தபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதை யடுத்து பா.ஜ.க.வினர் கோவில் நுழைவுவாயில் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பா.ஜ.க. அயல்நாட்டுவாழ் தமிழர் பிரிவு மாநில செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கே.மருதை, நகர தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில விவசாய அணி துணைத்தலைவர் .ரமேஷ், முன்னாள் ராணுவ வீரர் பிரிவு மாநில துணை தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட ஆன்மீக பிரிவு தலைவர் ஜெயகோபி, பட்டியல் அணி தலைவர் வெற்றிவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 50 பேரை சிதம்பரம் நகர போலீசார் கைது செய்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனா். பின்னர் இரவில் அனைவரையும் விடுவித்தனர்.


Next Story