விஷவாயு தாக்கியதில் இறந்த மேலும் ஒருவரது உடல் கண்டெடுப்பு


விஷவாயு தாக்கியதில் இறந்த மேலும் ஒருவரது உடல் கண்டெடுப்பு
x

கரூரில், விஷவாயு தாக்கியதில் இறந்த மேலும் ஒருவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனால் சாவு எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.

கரூர்

கழிவுநீர் தொட்டி

கரூர் சுக்காலியூர் காந்தி நகரை சேர்ந்தவர் குணசேகரன், வக்கீல். இவர் அப்பகுதியில் வீடு கட்டி வருகிறார். இதில் தாந்தோணிமலை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 23), மணவாசி சின்னமலைபட்டியை சேர்ந்த சிவக்குமார்(38) ஆகியோர் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தனர்.இந்த வீட்டின் அருகே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கழிவுநீர் தொட்டி கட்டி முடிக்கப்பட்டு சிமெண்டு பூச்சுகள் முடித்து இருந்தனர். இதில் 2 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

3 பேர் சாவு

இந்தநிலையில் கடந்த 15-ந்தேதி அந்த தொட்டியின் உள்புறம் அடிக்கப்பட்டிருந்த பலகைகள் மற்றும் சவுக்கு கட்டைகளை அகற்றும் பணியில் மோகன்ராஜ், சிவக்குமார் ஆகியோர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 2 பேரும் அலறியபடி மயங்கி விழுந்தனர்.இவர்களின் அலறல் சத்தம்கேட்டு பக்கத்து கட்டிடத்தில் பணி செய்து கொண்டிருந்த மணவாசியை சேர்ந்த சிவா என்கிற ராஜேஷ் என்பவர் அவர்கள் 2 பேரையும் மீட்க முயன்றுள்ளார். அப்போது அவரும் விஷவாயு தாக்கி இறந்தார். இதுகுறித்து தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிந்து, வீட்டின் உரிமையாளர், கட்டிட மேஸ்திரி ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஒருவர் பலி

மணவாசி சின்னமலைபட்டியை சேர்ந்த சிவக்குமார் என்பவருடன் வேலைக்கு சென்ற அதே பகுதியை சேர்ந்த கோபால் (36) என்பவரும் கடந்த 2 நாட்களாக வீட்டிற்கு வரவில்லை என அவரது மனைவி மாயனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து கோபாலை தேடி வந்தனர். இந்தநிலையில் சிவக்குமார் உள்பட 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த கழிவுநீர் தொட்டி பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு கோபாலின் மோட்டார் சைக்கிளும், செருப்பும் கிடந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் தீயணைப்பு வீரர்களை வரவழைத்து கழிவுநீர் தொட்டியில் இறங்கி சோதனை செய்தனர். அப்போது கோபாலும் அந்த தொட்டிக்குள் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து கோபாலின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் விஷவாயு தாக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.


Next Story