கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு


கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 23 July 2022 7:06 AM IST (Updated: 23 July 2022 9:48 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொண்டனர்.

கள்ளக்குறிச்சி,

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் ஸ்ரீமதி(வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார்.

இதனிடையே, கடந்த 13-ந்தேதி விடுதியில் இருந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். பள்ளி நிர்வாக தரப்பில் ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.

ஆனால் இதை அவரது பெற்றோர் ஏற்கவில்லை, சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். இதில் கடந்த 17-ந்தேதி பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டம், பெரிய கலவரத்தில் முடிந்தது. மாணவி மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், மாணவி ஸ்ரீமதியின் மரணத்தில் மர்ம இருப்பதாக கூறி அவரது உடலை வாங்க பெற்றோர் மறுப்பு தெரிவித்து வந்தனர். இதனால் கடந்த 10 நாட்களாக ஸ்ரீமதியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தனது.

அதேவேளை, மாணவியின் மரணம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நேற்று நடந்த விசாரணையின் போது மாணவி ஸ்ரீமதியின் உடலை பெற்றுக்கொள்ள அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மாணவி ஸ்ரீமதியின் உடலை அவரது பெற்றோர் இன்று பெற்றுக்கொண்டனர். காலை 6.50 மணியளவில் மாணவி ஸ்ரீமதியின் உடலை அவரது பெற்றோர் பெற்றுகொண்டனர். ஸ்ரீமதியின் தாயார் கையெழுத்துப்போட்டு தனது மகளின் உடலை பெற்றுக்கொண்டார்.

மாணவி ஸ்ரீமதியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் இருந்து ஸ்ரீமதியின் உடல் அவரது சொந்த ஊரான பெரியநெசலூர் கொண்டு செல்லப்பட்டுகிறது.

முன்னதாக, மருத்துவமனையில் இருந்த ஸ்ரீமதியின் உடலுக்கு அமைச்சர் கணேசன், அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

வழக்கு தொடர்பான முழு விவரம்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மர்ம மரணம் அடைந்த பள்ளி மாணவி ஸ்ரீமதி உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய டாக்டர்கள் குழுவை அமைத்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.சதீஷ்குமார் உத்தரவிட்டார். ஆனால் இந்த குழுவில் மாணவியின் தந்தை தரப்பில் டாக்டர்கள் நியமிக்கப்படாததால், அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கை முடித்துவைத்த சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டை நாடும்படி உத்தரவிட்டது.

இதற்கிடையில், ஐகோர்ட்டு நியமித்த டாக்டர்கள் குழு, மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்தது. மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ஸ்ரீமதி உடலை அவரது பெற்றோர் வாங்கவில்லை. இதனால், உடலை வாங்க அவர்களுக்கு உத்தரவிடக்கோரி அரசு தரப்பில் ஐகோர்ட்டு நீதிபதி சதீஷ்குமாரிடம் நேற்று முன்தினம் முறையிடப்பட்டது.

அனுதாபம் உள்ளது

அதற்கு நீதிபதி, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு நகலை பார்த்த பின்னர்தான் அடுத்தகட்ட உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நேற்று முன்தினம் நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு நேற்று காலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு நகலை மாணவின் பெற்றோர் சார்பில் ஆஜரான வக்கீல்கள் சங்கரசுப்பு, ரமேஷ் ஆகியோர் தாக்கல் செய்தனர்.

அதை நீதிபதி படித்து பார்த்தார். பின்னர், 'இந்த ஐகோர்ட்டு மீது நம்பிக்கை உள்ளதா? இல்லையா? மகளை இழந்த மனுதாரர் ராமலிங்கம் மீது அனுதாபம் உள்ளது. அதற்காக ஐகோர்ட்டு உத்தரவிட்டும் உடலை வாங்க தாமதம் செய்வது ஏன்?' என்று ராமலிங்கம் தரப்பு வக்கீல்களிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மாணவர்களின் மனநிலை

அதற்கு அவர்கள், 'இந்த ஐகோர்ட்டு மீது முழு நம்பிக்கை உள்ளது. அதேநேரம், மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ததில் சந்தேகம் உள்ளது' என்றனர்.

இதையடுத்து நீதிபதி, 'ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்சினையை ஏற்படுத்தக்கூடாது. அமைதியான முறையில் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும். மகளின் உடலை வைத்து பெற்றோர் அரசிடம் பந்தயம் கட்டக்கூடாது. மறு பிரேத பரிசோதனை தொடர்பான உத்தரவில், சுப்ரீம் கோர்ட்டு தலையிடவில்லை. அதனால், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை திரும்பப்பெற போவது இல்லை.

வன்முறையால் பாதிக்கப்பட்ட அந்த பள்ளி மாணவர்களை பற்றி எவரும் பேசவில்லை. இந்த வன்முறையால் கல்வி பாதித்த மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை அனைவரும் யோசித்துப்பார்க்க வேண்டும்' என்று கருத்து கூறினார்.

பொய் செய்தி

அப்போது குறுக்கிட்ட மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, 'அந்த மாணவர்கள் குறித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆலோசித்துள்ளார்' என்று கூறினார்.

அதற்கு நீதிபதி, 'மாணவியின் மரணத்தில் சிலர் ஆதாயம் தேடுகின்றனர். அது மனுதாரர் தரப்புக்கு தெரியாமலேயே நடந்துள்ளது. மாணவி மரணம் தொடர்பாக சமூக ஊடகங்கள் முழுவதும் பொய் செய்தியை பரப்புகின்றன. எனவே, மறு பிரேத பரிசோதனை செய்த அறிக்கையை புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் வீடியோ பதிவை அந்த டாக்டர்களிடம் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.

உடலை பெற சம்மதம்

மனுதாரர் தரப்பை பார்த்து, 'மாணவி இறந்து 10 நாட்கள் ஆகிவிட்டன. எப்போது உடலை பெற்றுக்கொள்ளப்போகிறீர்கள்? உடலை பெற்று கண்ணியமான முறையில் இறுதிச்சடங்கு நடத்துங்கள். மகளின் ஆன்மா இளைப்பாறட்டும். உடலை எப்போது பெறப்போகிறார்கள் என்பதை அந்த மாணவியின் பெற்றோரிடம் கேட்டு தெரிவிக்க வேண்டும். இதற்காக இந்த வழக்கை மதியம் 12 மணிக்கு தள்ளிவைக்கிறேன்' என்று நீதிபதி கூறினார்.

பின்னர் 12 மணிக்கு வழக்கை நீதிபதி விசாரணைக்கு எடுத்தபோது வக்கீல் சங்கரசுப்பு ஆஜராகி, 'மாணவியின் உடலை இன்று காலை 11 மணிக்கு பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்' என்று கூறினார்.

முடித்துவைப்பு

அதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, 'மாணவியின் உடலை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும். மாலை 6 மணிக்குள் உடலை அமைதியான முறையில் இறுதிச்சடங்கு நடத்தி முடிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார். அரசு தரப்பில் தாக்கல் செய்த மனுவை முடித்துவைத்தார்.


Next Story