காஞ்சீபுரம் அருகே பாழடைந்த கிணற்றில் இருந்து தனியார் நிறுவன அதிகாரி பிணமாக மீட்பு
காஞ்சீபுரம் அருகே மாயமான தனியார் நிறுவன மேற்பார்வையாளர் பாழடைந்த கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அண்ணா நகரை சேரந்தவர் சேகர். இவரது மகன் அருண்குமார் (வயது 29). இவர் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் சோமங்கலம் அடுத்த அமரம்பேடு பகுதியில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார்.
இவர் கடந்த 4-ந்தேதி பணி முடித்துவிட்டு, வீடு திரும்பாததால் இவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து பெற்றோர் சோமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அருண்குமாரின் செல்போன் எண்ணை கொண்டு தேடிய நிலையில் காஞ்சீபுரத்தை அடுத்த கீழம்பி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஒட்டி சிக்னல் விவரங்கள் தெரியவந்தது. இதனையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள அனைத்து இடங்களிலும் தேடிய நிலையில், அவரை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் செல்போன் எண் சிக்னல் காட்டிய போலீஸ் எல்லையான இது குறித்த விவரங்கள் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பாலமுருகன், காஞ்சீபுரம் மாவட்ட போலீ்ஸ் துறை சார்பில் செல்போன் எண் சிக்னல் வைத்து மீண்டும் தேடிய போதும் அந்த பகுதியை காட்டியநிலையில் அந்த இடத்தில் பாழடைந்த கிணறு ஒன்று இருந்தது.
இதனை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில், போலீசார் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். காஞ்சீபுரம் மாவட்ட தீயணைப்பு துறை, நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பாழடைந்த கிணற்றில் இறங்கி, ஒரு மணி நேரம் போராடி அருண்குமாரின் உடலை மீட்டனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.