பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்


பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
x

பொன்னேரி அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

சென்னை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த பஞ்செட்டியில் வேலம்மாள் கல்வி நிறுவன வளாகம் உள்ளது. இதில் இயங்கி வரும் 5 பள்ளிகளில் மொத்தம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியின் துணை முதல்வர் திலக்ராஜின் செல்போனுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காலை எந்த நேரத்திலும் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடிக்கப்போவதாகவும், அலட்சியம் வேண்டாம் எனவும், தற்போது இந்த விஷயத்தை கையாளுவது உங்களுடைய கைகளில் தான் உள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மேற்கண்ட குறுஞ்செய்தியை பார்த்த பள்ளியின் துணை முதல்வர் திலக்ராஜ், இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தார். அதே சமயத்தில் பள்ளிக்கு வந்திருந்த மாணவர்கள் அனைவரும் பத்திரமாக வீட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் பாதுகாக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு இதையொட்டி, கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியா சக்தி மேற்பார்வையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் இருந்து 2 வெடிகுண்டு நிபுணர் குழுவினர்கள் வந்தனர்.

மேலும் மோப்ப நாய்கள் மாயா, சீசர் வரவழைக்கப்பட்டன. நேற்று காலை முதல் பிற்பகல் வரை தொடர்ந்து 6 மணி நேர தீவிர சோதனைக்கு பிறகு பள்ளி வளாகத்தில் எந்த ஒரு இடத்திலும் வெடிகுண்டு இல்லை என்பதும், இது வெறும் புரளி என்பதும் உறுதியானது.

இதனையடுத்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடிகுண்டு வதந்தியை பரப்பியது யார்? என்பது குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர். வெடிகுண்டு புரளியால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story