கிணற்றில் குதித்து காதலன்- காதலி தற்கொலை - ஒரே இடத்தில் உடல்கள் அடக்கம்


கிணற்றில் குதித்து காதலன்- காதலி தற்கொலை - ஒரே இடத்தில் உடல்கள் அடக்கம்
x

காதல் ஜோடிகளின் உடல்களை கிணற்றுக்குள் இருந்து தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் மேற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் யுகேஷ் (வயது 20). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கணினி அறிவியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். யுகேசும், அவரது ஊரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகளான மணியரசியும் (15) காதலித்து வந்தனர்.

இவர்களின் காதல் விவகாரம் 2 பேரின் வீட்டிற்கும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களது காதலுக்கு 2 பேருடைய பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் யுகேசும், மணியரசியும் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் தங்களது வீட்டை விட்டு வெளியேறினர். இதையறிந்த அவர்களது பெற்றோர்களும், உறவினர்களும் யுகேசையும், மணியரசியையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை 9 மணியளவில் யுகேசின் மாமாவான ராஜேஷ் என்பவரது வயலில் உள்ள கிணற்றின் அருகே யுகேஷ், மணியரசியின் காலணிகள் ஜோடியாக கிடந்தன. இதனால் அவர்கள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம்? என்று சந்தேகமடைந்த உறவினர்கள் இது குறித்து உடனடியாக பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் முதலில் மணியரசியின் உடலையும், சிறிது நேரத்தில் யுகேசின் உடலையும் கிணற்றுக்குள் இருந்து தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

மணியரசி, யுகேசின் உடல்களை பார்த்து அவர்களது பெற்றோர்கள், உறவினர்கள் கதறி அழுதது காண்போரையும் கண்கலங்க செய்தது. இந்த சம்பவம் பற்றிய தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால் அங்கு பொதுமக்கள் கூடினர். இதற்கிடையே சம்பவ இடத்துக்கு வந்த பெரம்பலூர் போலீசார் பொதுமக்கள் கூட்டத்தை கலைந்து போகச்செய்து, யுகேஷ், மணியரசி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், யுகேசும், மணியரசியும் ஒருவருக்கொருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு அவர்களது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்கள் தங்களை பிரித்து விடுவார்கள் என்று எண்ணிய 2 பேரும் நேற்று முன்தினம் இரவு தங்களது வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

பின்னர் அவர்கள் வாழ்க்கையில் நாம் ஒன்று சேர முடியாது, எனவே சேர்ந்து சாகலாம் என்று முடிவு செய்து கிணற்றில் குதித்துள்ளனர். அவர்கள் 2 பேருக்கும் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி ஒருவரை தொடர்ந்து மற்றொருவர் இறந்துள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்தாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த யுகேஷ் வீட்டில் மூத்த மகன் ஆவார். அவருக்கு ஒரு தம்பி உள்ளார். இதேபோல் மணியரசிக்கு ஒரு அக்காளும், தம்பியும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

ஒரே இடத்தில் உடல்கள் அடக்கம்

காதலித்த யுகேசும், மணியரசியும் வாழ்க்கையில் ஒன்று சேர முடியாது என்று எண்ணி தற்கொலை முடிவை எடுத்துள்ளனர். இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட பின்னர் அவர்கள் 2 பேரின் உடல்களும் ஒரே ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அவர்களது உடல்கள் மாலையில் மீண்டும் ஒரே ஆம்புலன்சில் வைத்து, கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

'பிறந்த நாளுக்கு பிறகு இருக்க மாட்டேன்'

மணியரசிக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் பிறந்த நாள் வந்துள்ளது. ஏற்கனவே அவர் தனது தாயிடம் 'இந்த பிறந்த நாளுக்கு பிறகு நான் இருக்க மாட்டேன்' என்று தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. அவர் கூறியபடியே பிறந்த நாளுக்கு பிறகு மணியரசி இறந்து விட்டதாக அவரது தாய் கண்ணீா் மல்க கூறி கதறி அழுதது காண்போரையும் கண்கலங்க செய்தது.


Next Story