மூளைச்சாவு அடைந்த இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி பெண் டாக்டர் உடல் உறுப்புகள் தானம்


மூளைச்சாவு அடைந்த இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி பெண் டாக்டர் உடல் உறுப்புகள் தானம்
x

மூளைச்சாவு அடைந்த இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி பெண் டாக்டரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதன் மூலம் 3 பேர் மறுவாழ்வு பெற்றனர்.

சென்னை

சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் மருத்துவ கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் டாக்டர் புவனேஸ்வரி (வயது 55). இவரது சொந்த ஊர் கடலூர் மாவட்டம் கிளிஞ்சிக்குப்பம் ஆகும். இவர் நேற்று முன்தினம் 2023-24 கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு ஊக்கமும், உத்வேகமும், உற்சாகமும் கொடுக்கும் வகையில் அறிமுக வகுப்பை நடத்திக்கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென புவனேஸ்வரி மயங்கி கீழே விழுந்தார். அவரை பரிசோதித்துவிட்டு, அவருக்கு தேவையான அவசர மருத்துவ உதவிகளை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியின் டாக்டர்கள் குழுவினர் தொடர்ந்து செய்தனர். ஆனாலும் உடல்நலம் தேறவில்லை. பின்னர் மேல்சிகிச்சைக்காக வடபழனியில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் புவனேஸ்வரி அனுமதிக்கப்பட்டார்.

புவனேஸ்வரிக்கு மூளையில் கடுமையான ரத்தக்கசிவு இருந்தது. டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மூளைச்சாவு அடைந்தார். தான் மூளைச்சாவு அடைந்தால் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க வேண்டும் என்பதில், புவனேஸ்வரியும் உறுதியாக இருந்து வந்தார். இதுதான் அவருடைய விருப்பமாக இருந்ததாக அவருடன் பணியாற்றிய டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், மூளைச்சாவு அடைந்த புவனேஸ்வரியின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதற்கு அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்களும் முன்வந்தனர். இதையடுத்து, அவருடைய உடலில் இருந்து 2 சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகியவை பிரித்து எடுக்கப்பட்டு, தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.

புவனேஸ்வரியின் உடல் உறுப்புகளை தானமாக பெற்றதன் மூலம் 3 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். உயிரோடு இருந்த சமயத்தில் நோயாளிகளை காப்பாற்றி அவர்களது வாழ்க்கையில் ஒளியேற்றிய புவனேஸ்வரி, தான் மரணத்தை தழுவிய பின்னரும் ஒரு டாக்டராகவும், பண்பாளராகவும், கொடையாளியாகவும் இருந்து 3 பேருக்கு வாழ்க்கை கொடுத்து இருக்கிறார்.

புவனேஸ்வரி இறக்கவில்லை, தானமாக கொடுத்த உடல் உறுப்புகளின் மூலமாக இந்த பூமியில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். அவருடைய தியாகம் போற்றுதலுக்குரியது என்று அவருடன் பணியாற்றிய டாக்டர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.


Next Story