காலை உணவு திட்டம் விரிவாக்கம்வருகிற 25-ந் தேதி முதல் செயல்படுத்தப்படுகிது


காலை உணவு திட்டம் விரிவாக்கம்வருகிற 25-ந் தேதி முதல் செயல்படுத்தப்படுகிது
x

வருகிற 25-ந் தேதி முதல் 1,340 அரசு பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

சேலம்

ஒருங்கிணைப்பு கூட்டம்

சேலம் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக சேலம் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் அனைத்து தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ, மாணவிகள் விவரம், சமையலறை கூடங்களில் உள் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், புதிய சமையலறை கூடங்கள் கட்டுதல், சுய உதவிக்குழுவில் பணியாற்றும் அனுபவமிக்க சமையல் பணியாளர்கள் தேர்வு போன்றவை குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-

சேலம் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக சேலம் மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் 54 தொடக்க பள்ளிகளிலும், இரண்டாம் கட்டமாக 24 மாநகராட்சி தொடக்க பள்ளிகளிலும் மொத்தம் 78 பள்ளிகளில் 6,743 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

1,340 அரசு பள்ளிகளில்

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஊரக மற்றும் நகர்புறங்களில் உள்ள 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் வருகிற 25-ந் தேதி அன்று விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் தற்பொழுது 1,340 அரசு பள்ளிகளில் பயிலும் 83,291 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை விரிவாக்கம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ருசி பார்த்து...

மேலும், காலை உணவு தயாரித்தலுக்குரிய காய்கறிகள், எண்ணெய் மற்றும் சமையல் பொருட்களின் தரம் மற்றும் தயார் செய்யப்பட்ட உணவினை மாணவ, மாணவிகளுக்கு வழங்கும் முன் பள்ளி மேலாண்மைக் குழு ஒவ்வொரு நாளும் தரத்தினை உறுதி செய்திடும் வகையில் உணவினை ருசி பார்த்து பின்னர் வழங்க வேண்டும். உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து உணவின் தரத்தை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ரவிக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story