ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து துணிகள்-பணம் கொள்ளை


ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து துணிகள்-பணம் கொள்ளை
x

நாகர்கோவில் அருகே ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து துணிகள் மற்றும் பணம் கொள்ளையடித்து செல்லப்பட்டது. முகமூடி அணிந்து வந்து கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

மேலகிருஷ்ணன்புதூர்,

நாகர்கோவில் அருகே ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து துணிகள் மற்றும் பணம் கொள்ளையடித்து செல்லப்பட்டது. முகமூடி அணிந்து வந்து கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜவுளிக்கடை

நாகர்கோவில் அருகே உள்ள தெங்கம்புதூர் பகுதியை சேர்ந்தவர் முகமதுஅப்துல் காதர் (வயது 37). இவர் தெங்கம்புதூர் சந்திப்பில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

நேற்று காலையில் அவருடைய அண்ணன் சகாபுதீன், ஜவுளிக்கடை அருகே உள்ள பால் கடையை திறக்க வந்தார். அப்போது முகமதுஅப்துல் காதரின் கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே முகமது அப்துல் காதருக்கு தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவர் கடைக்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது கடையின் ஷட்டர்களில் போடப்பட்டிருந்த 2 பூட்டுகளும் உடைக்கப்பட்டு ஷட்டர் அரை அளவில் திறந்த நிலையில் இருந்தது.

கொள்ளை

கடையின் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த துணிகள் மற்றும் பொருட்கள் சிதறி கிடந்தது. மேஜை டிராயரில் வைத்து இருந்த ரூ.2,500-யும், விலை உயர்ந்த 10 டி சர்ட், 10 சட்டைகள், 3 டிராக் சூட், ஒரு பேண்ட் என ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள துணிகளையும் காணவில்லை. மேலும் 2 பேக்குகளும் புதிதாக மேஜை மீது இருந்தது. எனவே யாரோ மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து துணிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இதுபற்றி சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது ஜவுளிக்கடையில் பணம் மற்றும் ஜவுளியை கொள்ளையடிக்க வந்தவர்கள் பணத்தை எடுத்துள்ளனர். துணியை பேக்குகளில் வைத்து கொண்டு செல்ல திட்டமிட்டு உள்ளனர். ஆனால் கடை மெயின் ரோட்டில் இருந்ததால், ஆள் நடமாட்டம் சத்தம் கேட்டிருக்க வேண்டும். அதனால் தாங்கள் துணிகளை எடுத்து செல்ல கொண்டு வந்த 2 பேக்குகளையும் அங்கேயே விட்டு விட்டு பணத்துடன் ஓடியிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

முகமூடி அணிந்து இருந்தனர்

மேலும், கடையில் கண்காணிப்பு கேமரா உள்ளது. அதை கடையை பூட்டி விட்டு உரிமையாளர் செல்லும் போது கண்காணிப்பு கேமராவையும் அணைத்து வைத்து விட்டு செல்வது வழக்கம். இதனால் கடையில் கண்காணிப்பு கேமரா இருந்தும் கொள்ளையர்களை கண்டறிய முடியவில் லை.

இதனால் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அப்போது அதில் ஒரு கண்காணிப்பு கேமராவில் முகமூடி அணிந்து 2-க்கும் மேற்பட்டோர் கைவரிசை காட்டுவது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

கைரேகை பதிவு

இது தொடர்பாக கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். அதில் முக்கியமாக மூன்று பேரின் கைரேகை சிக்கியது.

இதன் மூலம் தனிப்படை போலீசார் இந்த கொள்ளை சம்பவத்தில் மூன்றுக்கு மேற்பட்டோர் ஈடுபட்டு இருக்கலாம் என கருதி விசாரணை நடத்தி வருகிறார்கள்.தெங்கம்புதூர் மெயின் ரோட்டில் நடந்திருக்கும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story