வெளிமாநில ஏற்றுமதி கன்டெய்னர் பெட்டியின் 'சீல்' உடைப்பு: ரூ.1 கோடி தாமிர பொருட்கள் திருட்டு; 5 பேர் சிக்கினர்


வெளிமாநில ஏற்றுமதி கன்டெய்னர் பெட்டியின் சீல் உடைப்பு: ரூ.1 கோடி தாமிர பொருட்கள் திருட்டு; 5 பேர் சிக்கினர்
x

திருவொற்றியூரில் வெளிமாநிலத்துக்கு ஏற்றுமதி செய்ய தயாராக இருந்த கன்டெய்னர் பெட்டியின் ‘சீல்’ உடைத்து ரூ.1 கோடி தாமிர பொருட்கள் திருடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சர்வண்குமார் என்பவர் கடந்த 4 மாதங்களாக மாதவரத்தில் தங்கி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் சென்னையில் இரும்பு, பித்தளை, தாமிர பொருட்களை வாங்கி அவற்றை திருவொற்றியூரில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான கன்டெய்னர் பெட்டகத்தில் ஏற்றி டெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 8-ந் தேதி 28 ஆயிரம் டன் எடையுள்ள இரும்பு தாமிர பொருட்களை மொத்தமாக கன்டெய்னர் பெட்டகத்தில் வைத்து 'சீல்' வைத்து விட்டு சர்வண்குமார் வீட்டிற்கு சென்று உள்ளார். மறுநாள் காலை கன்டெய்னர் யார்டு வந்தபோது கன்டெய்னர் பெட்டகத்தின் சீல் உடைக்கப்பட்டு அதிலிருந்து இரும்பு மற்றும் தாமிர ஆகியவை திருடப்பட்டு இருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து எடையை சரிபார்த்தபோது, சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள சுமார் 8 டன் எடையுள்ள தாமிர, இரும்பு பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து திருவொற்றியூர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் சர்வண் குமார் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி உத்தரவின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இந்த திருட்டு வழக்கில் திருவொற்றியூர் இந்திராநகரை சேர்ந்த ரவி (வயது 42), மணலி புதுநகர் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் கில்மன் பாபு (58), சடையங்குப்பம் பகுதியைச் சேர்ந்த வடமாநில தொழிலாளிகளான அனில்குமார் (55), நாராயணன் குமார் (40) கிரிசன் (40) உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.8 லட்சம் மற்றும் 6 டன் இரும்பை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் பொருட்களின் உரிமையாளர் சர்வண்குமார் ஜி.எஸ்.டி. வரி கட்டாமல் கன்டெய்னரில் பொருட்களை ஏற்றுமதி செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது இதனையடுத்து ஜி.எஸ்.டி. மாநில துணை அலுவலர் தாமரை மணாளன் கன்டெய்னர் பெட்டிக்கு 'சீல்' வைத்தார்.


Next Story