வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை- பணம் கொள்ளை


வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை- பணம் கொள்ளை
x
தினத்தந்தி 20 Aug 2023 12:15 AM IST (Updated: 20 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

பூட்டு உடைப்பு

கோவில்பட்டி பாரதி நகர் 7-வது தெருவில் குடியிருப்பவர் பாலசுப்பிரமணியன் மனைவி ஜோதி (வயது 64). இவர்களுடைய மகள் பகவதி திருமணமாகி கணவருடன் ஜோதி நகரில் குடியிருந்து வருகிறார். பாலசுப்பிரமணியன் இறந்து விட்டார்.

இதனால் வீட்டில் தனியாக இருந்த ஜோதி, இரவு ஜோதி நகரில் உள்ள தனது மகள் பகவதி வீட்டிற்கு சென்று தங்கி விட்டு, காலையில் வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஜோதி நகரில் உள்ள மகள் வீட்டில் தங்கி விட்டு, நேற்று காலையில் பாரதி நகர் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கீழே கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நகை- பணம் கொள்ளை

வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு துணிகள் சிதறி கிடந்தன. பீரோவில் வைத்திருந்த 9 பவுன் தங்க நகைகள், 150 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.16 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது.

இதுதொடர்பாக கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஜோதி புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கனகசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்மநபர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். தூத்துக்குடியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து வீட்டில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story