2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு


2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
x

கீழப்பழுவூரில் 2 வீடுகளின் பூட்டை உடைத்த மர்ம ஆசாமிகள் நகை, பணத்தை திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அரியலூர்

பெயிண்டர்

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழப்பழுவூரை சேர்ந்தவர் பிச்சைப்பிள்ளை (வயது 44), பெயிண்டர். இவர் தெற்கு தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை 2 குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு பிச்சைப்பிள்ளை மற்றும் அவரது மனைவி தங்களது வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றனர்.

பின்னர் மாலை பிச்சைப்பிள்ளை தனது வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகைகள், வெள்ளி கொலுசு மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது.

வலைவீச்சு

இதேபோல் அருணாச்சல நகரில் தனியாக வசித்து வந்த மும்தாஜ் பேகம் (55) நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிவிட்டு ஆடு மேய்ச்சலுக்காக சென்று விட்டு மாலை வந்து பார்த்துள்ளார். அப்போது அவரது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் வீட்டில் வைத்திருந்த பீரோவை உடைத்த மர்ம ஆசாமிகள் 2 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரத்தை திருடி சென்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story