காஞ்சீபுரம் அருகே ஏரியில் மூழ்கி அண்ணன், தங்கை சாவு


காஞ்சீபுரம் அருகே ஏரியில் மூழ்கி அண்ணன், தங்கை சாவு
x

காஞ்சீபுரம் அருகே ஏரியில் மூழ்கி அண்ணன், தங்கை பரிதாபமாக இறந்தனர்.

காஞ்சிபுரம்

ஏரியில் மூழ்கினர்

காஞ்சீபுரம் அருகே உள்ள 144 தண்டலம் ஊராட்சிக்கு உட்பட்ட நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். விவசாயி. இவரது மகன் விஜய் (வயது 9). 4-ம் வகுப்பு படித்து வந்தான். மகள் பூமிகா (8). 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்த நிலையில் விஜய், பூமிகா இருவரும் பள்ளி முடிந்து வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருக்கும் பெற்றோரை பார்க்க சென்றனர். பின்னர் அருகில் உள்ள ஏரியில் கை, கால்களை கழுவ சென்றனர்.

வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த பெற்றோர் நீண்ட நேரமாக குழந்தைகள் இருவதும் வராததால் சந்தேகம் அடைந்து சென்று பார்த்த போது அவர்கள் ஏரியில் மூழ்கியது தெரிய வந்தது.

உயிரிழந்தனர்

உடனடியாக குழந்தைகள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள பரந்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு இருவரும் உயிரிழந்து விட்டனர் என தெரிவித்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காஞ்சீபுரம் தாலுகா போலீசார் பெற்றோரிடமும் கிராம மக்களிடமும் பேசி உயிரிழந்த விஜய், பூமிகா, ஆகிய இரு குழந்தைகளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story