லாரி சக்கரத்தில் சிக்கி அண்ணன்-தங்கை உயிரிழப்பு - போலீசார் விசாரணை...!


லாரி சக்கரத்தில் சிக்கி அண்ணன்-தங்கை  உயிரிழப்பு - போலீசார் விசாரணை...!
x

பூதப்பாண்டி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி அண்ணன்-தங்கை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கன்னியாகுமரி

குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள காட்டுப்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுடலையாண்டி. இவரது மகன் மணிகண்டன் (வயது 26) ஐ.டி.ஐ படித்துள்ளார்.

மணிகண்டன் நாகர்கோவிலில் உள்ள ஒரு மிட்டாய் கடையில் வேலை பார்த்துவந்தார். மணிகண்டனின் சித்தி மகள் ராஜேஸ்வரி(22) பி.ஏ படித்து உள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக நாகர்கோவிலில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

மணிகண்டன் தினசரி வேலைக்கு செல்லும்போது அவரது தங்கை ராஜேஸ்வரியை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்வது வழக்கம்.

இதேபோன்று இன்று காலையில் இருவரும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் துவரங்காடு பகுதியில் வந்த போது சுற்றுலா பயணிகளை ஏற்றி வந்த வேன் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மணிகண்டன் மற்றும் ராஜேஸ்வரி ஆகிய இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்த டாரஸ் லாரி இருவர் மீது ஏறி இறங்கியது.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ராஜேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மணிகண்டன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பூதப்பாண்டி போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story