சென்னை விமானநிலையத்தில் பீகார் மாணவர் கைப்பையில் சிக்கிய துப்பாக்கி தோட்டா - போலீசார் விசாரணை


சென்னை விமானநிலையத்தில் பீகார் மாணவர் கைப்பையில் சிக்கிய துப்பாக்கி தோட்டா - போலீசார் விசாரணை
x

சென்னை விமானநிலையத்தில் மும்பை செல்ல வந்த பீகார் மாணவர் கைப்பையில் துப்பாக்கி தோட்டா சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் காமராஜர் உள்நாட்டு முனையத்தில் இருந்து மராட்டிய மாநிலம் மும்பை அருகே உள்ளே புனே நகருக்கு விமானம் செல்ல தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு போலீசார் சோதனை செய்தனர்.அப்போது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த விஷால் சிங் (வயது 24) என்பவர் புனே செல்ல பாதுகாப்பு சோதனைக்கு காத்து இருந்தார். இதையடுத்து இவரது உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேன் மூலம் பரிசோதித்தனர். அப்போது விஷால் சிங் கைப்பையில் இருந்து வெடிக்குண்டு இருப்பதற்கான எச்சரிக்கை மணி ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பையை தனியே எடுத்து வைத்ததுடன், விஷால் சிங்கை அழைத்து சோதித்த போது எஸ்.எல்.ஆர். துப்பாக்கியில் பயன்படுத்தும் வெடிக்கக்கூடிய தோட்டா ஒன்று இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து விஷால் சிங் விமான பயணத்தை ரத்து செய்து அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அவர், புதுச்சேரியில் தங்கி இருந்து தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. இறுதி ஆண்டு படித்து வருவதும், அவரது தந்தை மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரியாக பணியாற்றுவதும் தெரியவந்தது.

மேலும் அவரது தந்தை துப்பாக்கித்தோட்டா வைத்திருந்த கைப்பையை தவறுதலாக எடுத்து வந்ததாகவும் விஷால் சிங் கூறினார். பின்னர் விஷால் சிங்கையும், துப்பாக்கி தோட்டாவையும் சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். துப்பாக்கி தோட்டாவை பறிமுதல் செய்த போலீசார் விஷால்சிங்கிடம் விசாரணை செய்ததுடன், காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள விஷால் சிங்கின் தந்தைக்கும் தகவல் கொடுத்தனர். பின்னர் எழுதி வாங்கி எச்சரித்து விஷால்சிங்கை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story