இண்டூர் அருகே சீராக குடிநீர் வழங்ககோரி அரசு பஸ்சை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டம்அதிகாரிகள் பேச்சுவார்த்தை


இண்டூர் அருகே சீராக குடிநீர் வழங்ககோரி  அரசு பஸ்சை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டம்அதிகாரிகள் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 5 May 2023 7:00 PM GMT (Updated: 5 May 2023 7:00 PM GMT)
தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

இண்டூர் அருகே சீராக குடிநீர் வழங்ககோரி அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர்

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள கெட்டுஅள்ளி ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 300 குடும்பங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் 3 நாட்களுக்கு ஒருமுறை வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

மேலும் கெட்டுஅள்ளி ஏரிக்கரையில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து குழாய் மூலம் நீரேற்றி அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

சிறைபிடிப்பு

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் உடைந்து போனதால் நீரேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. குழாய் பழுது சரி செய்யப்படாததால் ஒகேனக்கல் குடிநீரை மட்டும் பிடித்து கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இதற்கிடையே 4 நாட்களாக ஒகேனக்கல் குடிநீரும் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி கிராம மக்கள் நேற்று தர்மபுரியில் இருந்து சென்ற அரசு பஸ்சை கெட்டுஅள்ளி கிராமத்தில் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சென்ற அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story