நீண்ட கால கோரிக்கை நிறைவேறியது:ஏற்காடு மலை கிராமத்துக்கு பஸ் வசதிதாரை, தப்பட்டை முழங்க மக்கள் உற்சாக வரவேற்பு


நீண்ட கால கோரிக்கை நிறைவேறியது:ஏற்காடு மலை கிராமத்துக்கு பஸ் வசதிதாரை, தப்பட்டை முழங்க மக்கள் உற்சாக வரவேற்பு
x

நீண்ட கால கோரிக்கையான ஏற்காடு மலை கிராமத்துக்கு பஸ் வசதி தொடங்கப்பட்டதையொட்டி தாரை, தப்பட்டை முழங்க மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சேலம்

சேலம்

நீண்ட கால கோரிக்கையான ஏற்காடு மலை கிராமத்துக்கு பஸ் வசதி தொடங்கப்பட்டதையொட்டி தாரை, தப்பட்டை முழங்க மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

புதிய பஸ் வழித்தடம்

ஏற்காடு, மாரமங்கலம் மலைக்கிராமத்திற்கு அரசு பஸ் வழித்தட தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி புதிய பஸ் வழித்தடத்தை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அந்த பஸ்சில் கலெக்டர் மலைவாழ் மக்களுடன் மலை கிராமத்திற்கு பயணம் சென்றார். அதன் பின்னர் அவர் கூறியதாவது:-

பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாத மாரமங்கலம் மலை கிராமத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்படி தற்போது பஸ் சேவை தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. ஏற்காடு மலைப்பகுதியில் உள்ள 9 கிராம ஊராட்சிகளில் மாரமங்கலம் ஊராட்சியும் ஒன்று. இந்த ஊராட்சிக்கு போதுமான சாலை வசதிகள் இல்லாததால் சுமார் 25 கிலோ மீட்டர் சுற்றி வந்து ஏற்காடு அடையும் சூழ்நிலையில் இந்த மக்கள் இருந்தனர்.

சாலை வசதி

நீண்ட காலமாக இதற்கு தீர்வு காண முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். 2 மலைகளை இணைக்கும் வகையில் 2.6 கிலோ மீட்டர் இணைப்பு சாலை வசதி செய்து கொடுத்தால் 25 கிலோ மீட்டர் தூரம் என்பது 4 கிலோ மீட்டராக குறையும் என்று மாரமங்கலம் ஊராட்சி மக்கள் கோரிக்கை வைத்தனர். இது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு, தற்போது ரூ.7 கோடியில் புதிய இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பஸ் வழித்தடம் மூலம் மாரமங்கலம் கிராம ஊராட்சிக்குட்பட்ட நார்த்தஞ்சேடு, கொட்டஞ்சேடு, செந்திட்டு, அரங்கம், பெலாக்காடு உள்ளிட்ட 18 கிராம மக்கள் பயன்பெறுவார்கள். மழை காலங்களிலும் என்னோடு (கலெக்டர்) அலுவலர்கள் இந்த மலைப்பாதையில் நடந்து வந்து தொய்வில்லாமல் பணிகள் மேற்கொண்டதால் இக்கிராம மக்களின் நீண்ட கால கனவு தற்போது நிறைவடைந்துள்ளது.

தாரை, தப்பட்டை

மலை கிராமத்திற்கு பஸ் வசதி தொடங்கப்பட்டுள்ளதை மலைவாழ் மக்கள் தாரை, தப்பட்டை முழங்க ஆடி, பாடி உற்சாகமாக கொண்டாடி புதிய பஸ்சை வரவேற்று அரசுக்கு நன்றி தெரிவித்தனர். அதன்படி அனைத்து மலை கிராம மக்களின் கோரிக்கைகள் பரிசீலித்து, நேரடியாக ஆய்வு நடத்தப்பட்டு அனைத்தும் உடனுக்குடன் அரசு சார்பில் நிறைவேற்றித்தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பொது மேலாளர் ஆதப்பன், போலீஸ் துணை சூப்பிரண்டு அமலஅட்வின், துணை மேலாளர் கலைவாணன், கோட்ட மேலாளர் கணேஷ், கிளை மேலாளர் பிரபாகரன், ஏற்காடு தாசில்தார் தாமோதரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்புராஜன், குணசேகரன், உதவி செயற்பொறியாளர் சதீஷ் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story