2 கிராமங்களுக்கு முதன்முறையாக பஸ் வசதி
அமைச்சர் ராஜகண்ணப்பன் ஏற்பாட்டில் 2 கிராமங்களுக்கு முதன்முறையாக பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது.
முதுகுளத்தூர்,
அமைச்சர் ராஜகண்ணப்பன் ஏற்பாட்டில் 2 கிராமங்களுக்கு முதன்முறையாக பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது.
சிறுகுடி
கடலாடி அருகே ஏ.புனவாசல் ஊராட்சி சிறுகுடி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் உள்ளனர். இந்த கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் வேலைகளுக்கு வெளியூர் செல்வதற்கும் மற்றும் மாணவ மாணவியர்கள் மேற்படிப்புக்கு பள்ளிகளுக்கு செல்வதற்கும் அதிக தொலைவு நடந்து சென்று பஸ்சில் பயணம் செய்யும் நிலையில் இருந்து வந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் சார்பில் ஏ.புனவாசல் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் அலுவலர்கள் சத்தியேந்திரன் டோனி சார்லஸ், ரஞ்சித் மணிகண்டன் ஆகியோர்களிடம் மனு அளித்தனர். கிராம மக்கள் மனு, அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் வழங்கப்பட்டது. மனு குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த கிராமத்திற்கு பஸ் வசதி செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
அதன் அடிப்படையில் நேற்று முதல் முறையாக கிராமத்திற்கு வந்த நகர பஸ்சை பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் வரவேற்று பஸ்சுக்கு மாலை அணிவித்து சூடம் காண்பித்தனர். பின்னர் பஸ் டிரைவர், கண்டக்டருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். ஏ.புனவாசல் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமையில் கடலாடி தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் ஆப்பனூர் ஆறுமுகவேல் கொடியசைத்து பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். பஸ் வசதி ஏற்பாடு செய்த அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும், அதிகாரிகளுக்கும் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
பருத்திக்குளம்
இதே போல முதுகுளத்தூர் அருகே உள்ள விளங்குளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பருத்திகுளம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் வெளியூர் செல்ல 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முதுகுளத்தூர்-பரமக்குடி பருக்கைகுடி விலக்கு சென்று தான் பஸ் ஏற வேண்டும். இதுகுறித்து முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் உள்ள அமைச்சர் உதவியாளர்களிடம் பஸ் வசதி வேண்டி மனு அளித்தனர். அதன் அடிப்படையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் நடவடிக்கையால் பருக்கைகுடி கிராமத்திற்கு பஸ் வசதி செய்து கொடுக்கப்பட்டது. இதனை அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பாக முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிலையில் 75 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு பஸ் பருத்திகுளம் கிராமத்துக்குள் வந்ததை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் கைதட்டி வரவேற்றனர். பின்னர் பஸ்சில் ஏறி மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சிகளில் முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலர்கள் சத்தியேந்திரன், டோனி சார்லஸ், ரஞ்சித் மணிகண்டன், இளைஞர் அணி முருகப்பெருமாள், சிவராமன், மாரிநாதன், பழனிவேல் பாண்டி, ராமநாதபுரம் கோட்ட மேலாளர் பத்மகுமார், முதுகுளத்தூர் மேலாளர் சிவ கார்த்திக், தொ.மு.ச. காரைக்குடி மண்டல பொதுச்செயலாளர் பச்சமால், இணை பொதுச்செயலாளர் லிங்கம், கிளைச் செயலாளர் முருகேசன், விளங்குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கனகவல்லி முத்துவேல்,ஒன்றிய அவைத்தலைவர் கருணாநிதி, கிளைக்கழக செயலாளர்கள் முருகேசன், சேதுபாண்டி, பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.