குறுகலான சாலையில் சிக்கிய பஸ், லாரி
கிணத்துக்கடவில் குறுகலான சர்வீஸ் சாலையில் பஸ், லாரி சிக்கிக்கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவில் குறுகலான சர்வீஸ் சாலையில் பஸ், லாரி சிக்கிக்கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
குறுகிய சர்வீஸ் சாலை
கோவை-பொள்ளாச்சி இடையே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 4 வழிச்சாலையும், கிணத்துக்கடவில் மேம்பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 4 வழிச்சாலையில் இருந்து கிணத்துக்கடவுக்கு செல்ல சர்வீஸ் சாலை (அணுகு சாலை) அமைக்கப்பட்டுள்ளது.
இதில் டி.இ.எல்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு போடப்பட்டுள்ள சர்வீஸ் சாலை அடிக்கடி பழுதடைந்து வருகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினரிடம் புகார் அளித்தால், சாலையை அவசர கதியில் சீரமைத்துவிட்டு சென்றுவிடுகின்றனர்.
இதன் காரணமாக சில நாட்களிலேயே மீண்டும் அந்த இடத்தில் சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறிவிடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
பஸ்சும், லாரியும் சிக்கிக்கொண்டன
இந்த நிலையில் நேற்று காலை 9 மணியளவில் பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவுக்கு வந்த அரசு பஸ் இந்த சர்வீஸ் சாலை வழியாக கோவைக்கு சென்றது. அப்போது சர்வீஸ் சாலையில் மினி லாரி ஒன்று எதிரே வந்தது. குறுகலான சாலை என்பதால் அரசு பஸ்சும், மினிலாரியும் மெதுவாக கிராஸ் செய்து செல்ல முயன்றன.
அப்போது பஸ்சும், லாரியும் பெண்கள் பள்ளி முன்பு சாலையில் ஏற்பட்டிருந்த பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. இதனால் சர்வீஸ் சாலையில் வாகனங்கள் அணி வகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
சர்வீஸ் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பெரும்பாலான பஸ்கள் கிணத்துக்கடவு ஊருக்குள் வராமல் மேம்பாலம் வழியாக சென்றன. இதனால் பஸ் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பள்ளத்தில் கற்களை போட்டு அரசு பஸ்சையும், லாரியையும் மீட்டனர். இதையடுத்து போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். சர்வீஸ் சாலையில் அரசு பஸ்சும், லாரியும் சிக்கிக்கொண்டதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சர்வீஸ் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருவதால், சாலையை தரமாக சீரமைக்க வேண்டும் அல்லது சர்வீஸ் சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.