பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தம்


பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தம்
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-24T00:15:20+05:30)

கேரளாவில் முழுஅடைப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. இதனால் பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசு பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

கேரளாவில் முழுஅடைப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. இதனால் பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசு பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

முழு அடைப்பு போராட்டம்

பயங்கரவாதிகளுக்கு நிதிஉதவி செய்ததாக வந்த புகாரை தொடர்ந்து தமிழகம், கேரளா உள்பட 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து 106 பேர் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கேரளாவில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இரு்நதது. இதேபோன்று கேரளாவில் இருந்தும் பொள்ளாச்சிக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. கேரளாவில் இருந்து அதிகாலையில் பொள்ளாச்சிக்கு வந்த பஸ்கள் இங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டன.

கேரள எல்லையில் நிறுத்தம்

பஸ் நிலையத்தில் கேரளா செல்லும் பஸ்கள் நிறுத்தும் பகுதி பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பொள்ளாச்சியில் இருந்து தமிழக-கேரள எல்லையான கோபாலபுரம், நடுப்புணி, மீனாட்சிபுரம், கோவிந்தாபுரம் ஆகிய பகுதிகள் வரை மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன. அங்கிருந்து பயணிகள் கேரளாவிற்கு நடந்து சென்றனர். இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். மேலும் தமிழக-கேரள எல்லையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு சரக்கு ஏற்றி சென்ற வாகனங்கள் கேரள எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், கேரளாவில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றதால் பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் 12 அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை என்றனர்.Next Story